திருச்சி, டிச.2: திருச்சி சிறையில் இருந்து நீதிமன்றத்துக்கு அழைத்த போது கைதி வர மறுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது. திருச்சி மத்திய சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 1,500 பேர் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் வழக்கு நிலுவையில் உள்ள விசாரணை கைதிகள் அவ்வப்போது வழக்கு விசாரணைக்கு நீதிமன்றத்திற்கு அழைத்து சென்று ஆஜர்படுத்தப்படுவார்கள். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை சேர்ந்த வினோத் என்கிற வினோத்குமாரை சில நாட் களுக்கு முன்பு சங்கிலி பறிப்பு வழக்கில் திருச்சி கே.கே.நகர் போலீசார் கைது செய்து மத்திய சிறையில் அடைத்தனர்.

இந்த வழக்கு தொடர்பாக அவரை அழைத்து சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கடந்த 29-ந் தேதி போலீசார் சிறைக்கு வந்தனர். அப்போது அவர், தான் வெளியே வந்தால் போலீசார் என்கவுண்ட்டரில் சுட்டு கொன்றுவிடுவார்கள். அதனால் கோர்ட்டுக்கு வரமாட்டேன் என்று கூறி கீழே கிடந்த கண்ணாடி துண்டை எடுத்து தனக்கு தானே உடலில் கிழித்து கொண்டார். ‘ திருச்சி சிறையில் நடந்த இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.