தீவிர கண்காணிப்பில் தமிழக அணைகள் மத்திய நீர்வளத்துறை அமைச்சம் அறிவுறுத்தல்

சென்னை

சென்னை, டிச.2: சென்னை குடிநீர் ஏரிகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் அடுத்த 2 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்பதால் 24 மணி நேரமும் ஏரிகளின் நீர் மட்டத்தை கண்காணிக்குமாறு மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அறிவுறுத்தியுள்ளது. இதனிடையே 2 நாட்கள் பெய்த கனமழையால் சென்னை குடிநீர் ஏரிகளில் நீர்மட்டம் கனிசமாக உயர்ந்துள்ளது. அணைகளுக்கு நீர்வரத்தும் அதிகரித்து இருக்கிறது. திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் வழங்கும் நான்கு ஏரிகளின் நீர்மட்டம் நேற்று முதல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. நேற்று ஒரே நாளில் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 100 மில்லியன் கனஅடியாக அதிகரித்து நீர்மட்டம் 913 மில்லியன் கனஅடியாக இருந்தது.

இந்த அணையின் மொத்த கொள்ளளவு 3,645 மில்லியன் கனஅடி ஆகும். செங்குன்றம் ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 76 மி.மீ மழையும், பூண்டி ஏரியின் நீர்பிடிப்பு பகுதியில் 78 மி.மீ. மழையும் பெய்தது. செம்பரம்பாக்கம் ஏரியில் 9 மி.மீ மழையும் பெய்துள்ளது. நீர்பிடிப்பு பகுதியில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதாக அதிகாரிகள் கூறியுள்ளனர். பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவதன 3,231 மில்லியன் கனஅடியில், தற்போது 1,229 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது. சோழாவரம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,081 கனஅடியில் 131 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.

கனமழை காரணமாக பூண்டி ஏரிக்கு வினாடிக்கு 2,925 கனஅடியும், செம்பரபாக்கம் ஏரிக்கு 1,923 கனஅடியும், சோழாவரம் ஏரிக்கு 440 கனஅடியும், செங்குன்றம் ஏரிக்கு 2,161 கனஅடியும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. சென்னைக்கு குடிநீர் வழங்கும் வீராணம் ஏரி வேகமாக நிரம்பி வருகிறது.மதுராந்தகம் ஏரியின் நீர்மட்டம் 18 அடியை தொட்டுவிட்டது. இந்த அணையின் நீர்மட்டம் 23.3 அடியாகும். அடுத்த 2 நாட்களுக்கு கொசஸ்தலை ஆறு, அடையாறு, பெண்னையாறு மற்றும் வெள்ளாறு நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது என்பதால் சென்னை குடிநீர் ஏரிகள் உள்ளிட்ட அனைத்து நதிகளின் அணைகளையும் 24 மணி நேரமும் கண்காணிப்பில் வைத்திருக்குமாறு மாநில அரசை மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.