திருச்சி, டிச.2: திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் புதிய சொத்து வரி வசூல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கமிஷனர் சு. சிவசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சு. சிவசுப்பிரமணியன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியதாவது:- திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கடந்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதி முதல் சொத்து வரி சீராய்வு செய்து, குடியிருப்பு கட்டடங்களுக்கு 50 சதவீதம், குடியிருப்பு அல்லாத கட்டடங்களுக்கு 100 சதவீதம் வரி உயர்வு செய்யப்பட்டது. மேலும், உயர்த்தப்பட்ட வரி வசூல் பணியும் நடைபெற்று வந்த நிலையில், மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையால் புதிய அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உயர்த்தப்பட்ட வரியை குறைப்பதற்கு ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளதால், புதிய சொத்து வரி வசூலிப்பதை நிறுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது. இதன்படி, மறு சீராய்வுக்கு பின் புதிய சொத்து வரி நிர்ணயம் செய்யும் வகையில், பழைய நிர்ணயத்தின் அடிப்படையில் சொத்து வரியை செலுத்தலாம். உயர்த்தப்பட்ட சொத்து வரியை ஏற்கெனவே செலுத்தியிருந்தால் அடுத்த அரையாண்டில் அவை ஈடு செய்து கொள்ளப்படும். எனவே, திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட மக்கள் பழைய சொத்து வரியை செலுத்தினால் போதும். மேலும், விவரங்களுக்கு இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இணையத்தின் மூலமும் வரி செலுத்தலாம்.