மகளிர் கிரிக்கெட்: ஜேப்பியார் கல்லூரி அணி சாம்பியன்

தமிழ்நாடு

திருச்சி, டிச.2: திருச்சியில் நடைபெற்ற மண்டலங்களுக்கு இடையிலான மகளிர் கிரிக்கெட் போட்டியில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணி சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. சென்னை, அண்ணா பல்கலைக்கழக விளையாட்டு கழகம் சார்பில் அண்ணா பல்கலைக்கழக இணைவு பெற்ற கல்லூரிகளின் மண்டலங்களுக்கு இடையே மாணவிகளுக்கான கிரிக்கெட் போட்டிகள், திருச்சியில் பல்கலைக்கழக வளாகத்தில்2 நாட்கள் நடைபெற்றன. சென்னை, அண்ணா பல்கலைகழகத்திற்கு உள்பட்ட 19 மண்டலங்களில் உள்ள கல்லூரிகளிலிருந்து தேர்வு பெற்ற 6 கல்லூரி அணிகள் பங்கேற்ற இறுதி போட்டியில் சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி அணியும், திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரி அணியும் மோதின.

இதில், சென்னை, ஜேப்பியார் பொறியியல் கல்லூரி 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இரண்டாவது இடத்தை திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் பொறியியல் கல்லூரியும், மூன்றாவது இடத்தை, அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரி, திருச்சி வளாகம் பிடித்தது.