சிதம்பரம், டிச.2: சிதம்பரம் ரெயில் நிலையத்தின் பிரதான நுழைவு வாயில், டிக்கெட் கொடுக்கும் கவுண்டர், முதலாவது மற்றும் இரண்டாவது நடை மேடைகளில் 61 சிசிடிவி கேமராக்ககள் பொருத்தப்பட்டு இந்த கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைக்கும் நிகழ்ச்சி சிதம்பரம் ரெயில் நிலையத்தில் நடந்தது. சிதம்பரம் ரெயில் நிலையத்தில் சமூக அமைப்புகள் மற்றும் சமூக ஆர்வலர்களிடமிருந்து சுமார் ரூ ஒரு லட்சம் மதிப்பீட்டில் 16 சிசிடிவி கேமராக்கள் ஏற்பாடு செய்யப்பட்டது. திருச்சி சரக ரயில்வே எஸ்பி செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக பங்கேற்று கேமராக்களின் செயல்பாடுகளை துவக்கி வைத்தார். பின்னர் ரிமோட் மூலம் கேமராவிற்கான திரைகளையும் துவக்கி வைத்து, காமிராக்களின் செயல்பாடுகளை பார்வையிட்டார்.

பல்வேறு இடங்களில் பொருத்தப்பட்டிருந்த காமிராக்களையும் பார்வையிட்டார். இந்த விழாவில் டி.எஸ்.பி. சுப்பிரமணியன் சிதம்பரம் ரயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் அம்பேத்கார் மற்றும் பலர் கலந்துக் கொண்டனர். பின்பு திருச்சி சரக ரயில்வே போலீஸ் எஸ்.பி. செந்தில்குமார் நிருபர்களிடம் கூறுகையில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில்வே இருப்புப் பாதை காவல் நிலையம் சார்பாக பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு 16 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் கண்காணிப்பு கேமரா என்பது மிகவும் அவசியம். அதிகரிக்கும் குற்றங்களை தடுப்பதற்காக இந்த கேமராக்கள் பயன்படுகிறது. வீடுகளில், வணிக வளாகங்களில் காவலரை நியமித்து இருப்போம். ஆனால் அவர் கூட சில நேரங்களில் அசந்து தூங்கி விடுவார். ஆனால் கேமராக்கள் எப்போதும் தூங்காது. இதன் மூலம்பொதுமக்களுக்கு பாதுகாப்பு மற்றும் குற்றங்களை தடுக்கலாம் என்றார்.