தமிழக பொறியாளருக்கு ‘நாசா’ பாராட்டு நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தார்

TOP-1 சென்னை தொழில்நுட்பம் முக்கிய செய்தி

சென்னை, டிச.3: நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரை, மதுரையை சேர்ந்த பொறியாளர் உதவியுடன் நாசா கண்டுபிடித்துள்ளது. நிலவின் தென் முனையை ஆய்வு செய்வதற்காக இஸ்ரோ அனுப்பிய சந்திரயான் 2 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை நிலவில் தரையிறக்கும் பணி செப்.7 ம் தேதி நடந்தது. அப்போது தரையிறங்குவதற்கு 400 மீட்டர் தூரத்தில், பூமியுடனான கட்டுப்பாட்டை விக்ரம் லேண்டர் இழந்தது. தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் லேண்டர் இருப்பது, ஆர்பிட்டார் மூலம் கண்டறியப்பட்டது. இதனால் தொடர்ந்து விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். அமெரிக்க விண்வெளி ஆய்வு மையமான நாசாவும், இஸ்ரோவுக்கு உதவியாக விக்ரம் லேண்டரை தொடர்பு கொள்ள முயற்சித்தது. இந்நிலையில் விக்ரம் -2 லேண்டரின் உடைந்த பாகங்கள் நிலவின் மேற்பரப்பில் இருப்பது கண்டறிப்பட்டதாக நாசா தனது டுவிட்டர் பக்கத்தில் படத்துடன் செய்தி வெளியிட்டுள்ளது.

மதுரை பொறியாளர் செய்த உதவி: நிலவில் விழுந்து நொறுங்கிய விக்ரம் லேண்டரின் கண்டறிய நாசாவுக்கு மதுரையை சேர்ந்த பொறியாளர்சண்முக சுப்பிரமணியன் என்பவர் உதவி செய்தது தெரியவந்துள்ளது. சென்னை தரமணியில்உள்ள கணினி நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வரும் அவர், நாசாவின் செயற்கைக்கோள் எடுத்த நிலவின் புகைப்படங்களை தொடர்ந்து ஆய்வு செய்தார். கடந்த செப்., 17, அக் 14, 15 மற்றும் நவ.,1 ல் நாசா வெளியிட்ட புகைப்படங்களை ஆய்வு செய்து லேண்டரை கண்டுபிடித்து,
நாசாவுக்கு இமெயில் செய்துள்ளார். இந்த இமெயிலை ஆய்வு செய்து நாசா விஞ்ஞானிகள் உறுதி செய்ததுடன் அதற்காக நன்றியும் தெரிவித்தனர். இது தொடர்பாக நாசா வெளியிட்ட அறிக்கையில், லேண்டர் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து 750 மீ., தொலைவில், லேண்டர் பாகங்கள் கிடந்ததை சண்முக சுப்ரமணியன் கண்டுபிடித்தார் எனக்கூறியுள்ளது. லேண்டர் பாகங்களை கண்டுபிடித்த சுப்ரமணியன், தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இது தான் விக்ரம் லேண்டரா? லேண்டர், லூனார் மணலில் புதைந்திருக்கலாம்’ என நாசாவின் டுவிட்டர் பக்கத்தை மேற்கொள்காட்டி பதிவிட்டார்.

சண்முக சுப்ரமணியன் பேட்டி: சண்முக சுப்ரமணியன் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: நிலவின் இரண்டு புகைப்படங்களையும் எனது இரண்டு லேப்டாப்களில் வைத்து மாறி மாறி ஆய்வு செய்தேன். இதில், ஒன்று பழைய புகைப்படம் என்பதும், மற்றொன்று புதிய புகைப்படம் என்பதும் தெரியவந்தது. இதனைகண்டுபிடிக்க கடினமானதாக இருந்தாலும், இதற்காக கடுமையாக உழைத்தேன். விக்ரம் லேண்டர் சென்ற பாதையை கண்டுபிடிக்க கடினமாக முயற்சி செய்தேன். நாசா அறிவிப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இதன் பின்னால் கடுமையான உழைப்பு இருந்தது. விண்வெளி அறிவியல் மீது எனக்கு எப்போதும் ஆர்வம் இருந்தது. எந்தவொரு வாய்ப்பையும் நான் தவற விடவில்லை எனக்கூறியுள்ளார். இஸ்ரோவில் பணிபுரிய வாய்ப்பு கிடைத்தால் சேருவீர்களா என்று கேட்டபோது, அங்கு குறிப்பிட்ட வரம்புக்குள் தான் பணியாற்ற முடியும். இருப்பினும் எனக்கு அதில் ஆர்வம் உண்டு. வருங்காலத்தில் என்ன நடக்கிறது என்று பார்ப்போம் என்று தெரிவித்தார்.