ரஜினிகாந்த் வீட்டில் நடந்த சிறப்பு ஹோமம் ‘கைதி’ பட இயக்குனரும் சந்தித்து பேசினார்

TOP-5 சென்னை முக்கிய செய்தி

சென்னை, டிச.3: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் நட்சத்திர பிறந்தநாளையொட்டி அவரது வீட்டில் நேற்று சிறப்பு ஹோமம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கைதி பட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் ரஜினியை நேரில் சந்தித்து பேசினார். ரஜினி தனது 70-வது பிறந்தநாளை வரும் 12-ம் தேதி கொண்டாட இருக்கிறார். அதை பிரம்மாண்டமாக கொண்டாட ரசிகர்கள் தயாராகி வருகின்றனர். இந்நிலையில் ரஜினிகாந்த் நேற்று தன்னுடைய பிறந்த நட்சத்திரமான திருவோணம் நட்சத்திரம் என்பதால், தனது வீட்டில் பத்துக்கும் புரோகிதர்களைக் கொண்டு சிறப்பு ஹோமம் நடத்தினார்.

அதனைத் தொடர்ந்து மாநகரம், கைதி ஆகிய படங்களை இயக்கிய லோகேஷ் கனகராஜ் ரஜினியை சந்தித்து பேசினார். அப்போது கைதி படம் பார்த்து மிகவும் பிரம்மித்ததாக ரஜினி அவரிடம் கூறியுள்ளார். அப்போது ரஜினிக்காக அவர் கதை ஒன்றை சொல்லியிருக்கிறார். தற்போது விஜய்யை வைத்து படம் எடுத்து வருகிறார். அதே போல் ரஜினியும் சிவா படத்தில் நடிக்க உள்ளார். இந்த இரு படங்களும் முடிந்த பிறகு இவர்கள் இருவரும் இணைந்து ஒரு படத்தில் பணிபுரிவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

கேரள மாற்றுத்திறனாளியுடன் சந்திப்பு: போயஸ் கார்டனில் நேற்று மாலை கேரளாவைச் சேர்ந்த மாற்றுத்திறனாளி ஓவியரான பிரணவ், தனது பெற்றோர் மற்றும் சகோதரருடன் ரஜினியை நேரில் சந்தித்தார். அப்போது ரஜினிக்காக தனது கால்களால் வரைந்து வைத்திருந்த ஓவியத்தை பிரணவ் வழங்கினார். சுமார் 20 நிமிடங்கள் இந்த சந்திப்பு நடந்தது. பின்னர் ரஜினியுடன் செல்பியும் பிரணவ் எடுத்துக் கொண்டார்.