போதிய அஸ்திவாரம் இல்லாமல் இடிந்தது 5 அடி செங்கல் சுவர் மீது 20 அடி கல்சுவர்

சென்னை

சென்னை, டிச.3: மேட்டுப்பாளையத்தில் நடூர் கிராமத்தில் சுவர் இடிந்து வீடுகள் மீது விழுந்து 17 பேர் உயிர் இழந்ததற்கு காரணம், போதிய அஸ்திவாரம் இன்றி 20 அடி உயரத்தில் கற்சுவர் கட்டப்பட்டதே என்று தெரியவந்துள்ளது. நடூர் கிராமத்தில் ஆதிதிராவிடர் காலனியையொட்டி ஜவுளிகடை அதிபருக்கு சொந்தமான இடம் உள்ளது. இரண்டுக்கும் நடுவே 5 அடி உயரத்தில் செங்கல் சுவர் இருந்திருக்கிறது. இந்த சுவருக்கு மேலே ஜவுளிகடை அதிபர் 20 அடி உயரத்திற்கு கருங்கல் சுவர் எழுப்பியுள்ளார். 5 அடி உயரத்திற்கான செங்கல் சுவருக்கு போடப்பட்ட அஸ்திவாரத்தின் மீது 20 அடி உயரத்திற்கு கல்சுவர் எழுப்பப்பட்டதால் அஸ்திவாரம் தாங்காமல் இடிந்து விழுந்ததாக கூறப்பட்டது.

ஆதிதிராவிடர் காலனியில் 200 வீடுகள் அமைந்துள்ளன. 1990-ல் மாநில அரசு பட்டா வழங்கியதை தொடர்ந்து இங்கு குடியேறியுள்ளனர். ஒரு ஆண்டுக்கு முன்பே சுவரில் அரிப்பு ஏற்பட்டதாகவும், இதை இடிக்க வேண்டும் என மேட்டுப்பாளையம் நகராட்சியில் குடியிருப்பு வாசிகள் மனு கொடுத்ததாகவும், குடியிருப்பு வாசிகள் கூறியுள்ளனர். மேலும் மழை நேரத்தில் சுவரை சுற்றி தண்ணீர் தேங்குவது வழக்கம் என்றும் கூறப்படுகிறது. சம்பவ இடத்தை நேரில் பார்வையிட்ட பேரிடர் மேலாண்மை குழுவின் துணை கம்மாண்டர் ராஜேஷ் கூறுகையில், சுவருக்கு அடியில் மண் அரிப்பு ஏற்பட்டு உள்ளது. இதுவே இடிந்துவில காரணம் என்றார். விபத்து நடந்ததை அறிந்த உடன் ஜவுளிகடை அதிபர் சிவசுப்ரமணியம் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிப்பதற்கு தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அஜாக்கிரதையாக மரணம் ஏற்படுத்துதல் உள்ளிட்ட இந்திய தண்டணை சட்டத்தில் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.