தனி தீவில் நித்தியானந்தா எல்லையில்லாத இந்து நாடு என வலைதளங்களில் பிரச்சாரம்

TOP-5 உலகம் முக்கிய செய்தி

வாஷிங்டன், டிச.4: சர்ச்சைக்குரிய நித்தியானந்தா அமெரிக்காவின் ஈக்குவடாரில் தனி தீவு வாங்கி தனி நாடு அமைத்து செயல்படுவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகி உள்ளன. மத்திய லத்தீனில் அமெரிக்காவின் ஈக்குவடாரில் உள்ள தீவை நித்யானந்தா வாங்கியுள்ளதாக உறுதிபடுத்தப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தனிக்கொடி, தனிச்சின்னம் உள்ளிட்டவற்றுடன் ‘கைலாசா’ என்று பெயரிட்டு தனிநாடாக உருவாக்கியுள்ளதாக அவரது ஆசிரமம் நடத்திவரும் வலைத்தளத்தின் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தன்னைத்தானே ஆன்மிக குரு என அழைத்து கொள்ளும் நித்யானந்தா பற்றி பல்வேறு புகார்கள் கூறப்பட்டுள்ளன. அகமதாபாத் ஆசிரமத்தில் சிறுமிகளை சட்டவிரோதமாக அடைத்து வைத்த புகார் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. அவரை குஜராத் போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் அவரது ஆசிரமம் சட்டவிரோதமான இடத்தில் அமைந்திருப்பது பற்றிய புகாரும் விசாரணையில் உள்ளது. இந்நிலையில் நித்யானந்தா தனது யூடியூப் சேனலில் செவ்வாய்க்கிழமை மாலை நேரலையில் ட்ரினிடாட் மற்றும் டொபாகோவுக்கு அருகிலுள்ள ஒரு தீவில் இருந்து “பரமசிவன் ஞானம்” பற்றிய சொற்பொழிவை நிகழ்த்தினார். நித்தியானந்தாவின் பாஸ்போர்ட் காலாவதியான போதிலும், எவ்வாறு நாட்டை விட்டு வெளியேற முடிந்தது என்று போலீசார் விசாரிக்கையில், அதிர்ச்சியூட்டும் வகையில், மத்திய லத்தீன் அமெரிக்காவின் ஈக்வடாரில் உள்ள தீவை நித்யானந்தா வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அவரது ஆசிரமம் நடத்திவரும் வலைத்தளத்தின் மூலம் ‘கைலாசா’ என்று பெயரிடப்பட்ட இந்த தனித் தீவை நித்யானந்தா உருவாக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கென சொந்தக் கொடி அமைத்து அதை ரிஷப துவஜா என்று பெயரிடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் கடவுச்சீட்டு மற்றும் இமயமலையில் நந்தியுடன் நித்தியானந்தா இருப்பது போன்று சின்னம் உருவாக்கப்பட்டு, இது ஒரு இந்து நாடு என்று குறிப்பிட்டுள்ளது. “தங்கள் சொந்த நாடுகளில் இந்து மதத்தை பின்பற்றுவதற்கான உரிமையை இழந்து உலகெங்கிலும் இருந்து வெளியேற்றப்பட்ட இந்துக்களால் உருவாக்கப்பட்ட எல்லைகள் இல்லாத நாடு” என்று இது விவரிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய நாட்டில் கோயில் சார்ந்த சுற்றுச்சூழல் அமைப்பு, மூன்றாம் கண்ணுக்கு பின்னால் உள்ள அறிவியல், யோகா, தியானம், குருகுலக் கல்விமுறை, உலகளாவிய இலவச சுகாதார அமைப்பு, இலவசக் கல்வி, இலவச உணவு மற்றும் அனைவருக்கும் கோயில் சார்ந்த வாழ்க்கை முறை வழங்கப்படும் என்று அந்த வலைத்தளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நாட்டின் மொழிகளாக ஆங்கிலம், சமஸ்கிருதம் மற்றும் தமிழ் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, வாங்கிய நிலத்தை அல்லது ஒரு தீவை ‘தனி நாடாக’ அறிவிப்பது ‘நகைச்சுவையல்ல’ என்று மத்திய வெளிவிவகாரத்துறை அமைச்சக வட்டாரங்கள் சுட்டிக்காட்டின. “மற்ற நாடுகள் இதை ஒரு நாடாக ஏற்றுக்கொள்ள வேண்டும், ஐக்கிய நாடுகள் சபையும் அதை அங்கீகரிக்க வேண்டும். எனவே இதை பெரிதாக எடுத்துக் கொள்ள வேண்டிய அவசியமில்லை” என்று தெரிவித்துள்ளது.

நித்யானந்தாவின் வலைத்தளத்தை புலனாய்வு அமைப்புகள் கடந்த சில வாரங்களாக உன்னிப்பாக கண்காணித்து வருகின்றன. “இது 2018 இல் உருவாக்கப்பட்டது மற்றும் சில மாதங்களுக்கு முன்பு புதுப்பிக்கப்பட்டது. அமெரிக்காவின் டெக்ஸாஸின் டல்லாஸுக்கு அருகே இதன் பயன்பாடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது” என்று புலனாய்வு வட்டாரங்கள் தெரிவித்தன.