இந்தி கட்டாய பாடம் ஆக்கப்படவில்லை அமைச்சர் பாண்டியராஜன் விளக்கம்

சென்னை

சென்னை, டிச.4: உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் இந்தி பயிற்சி மாணவர்களின் விருப்பத்தின் பேரிலேயே அளிக்கப்படுகிறது என்று தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் க.பாண்டியராஜன் விளக்கம் அளித்துள்ளார். தரமணியில் உள்ள உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தில் இந்தி பயிற்றுவிக்கப்படுவதாக புகார் கூறப்பட்டது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அமைச்சர் பாண்டியராஜன் இன்று காலை தரமணியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:- உலக தமிழ் ஆராய்ச்சி நிலையத்தின் தரத்தை உயர்த்துவதற்காகவே வேறு மொழிகள் பயிற்று விக்கப்படுகின்றன. 2014-ம் ஆண்டில் இருந்தே பிரெஞ்சு மொழி கற்பிக்கப்படுகிறது. மாணவர்களின் விருப்பத்தின் பேரில் இந்தி பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் எந்த கட்டாயமும் இல்லை.

அடுத்த ஆண்டில் விருப்பம் இல்லாவிட்டால் மாறி கொள்ளலாம். தெலுங்கு, பெங்காலி உள்ளிட்ட மொழிகளை கூட அவர்கள் கற்று கொள்ளலாம். இந்தி பிரச்சார சபா சார்பில் இங்கு வந்து இந்தி போதிக்கப்படுவதாக கூறப்படுவதில் உண்மை இல்லை. உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு உட்பட்ட அமைப்புகளில் பயிற்சி பெற்றவர்கள் கேம்ப்பஸ் இன்டர்வியூவில் தேர்வு செய்யப்பட்டு வருகிறார்கள். அந்தவகையில் வேலைவாய்ப்புக்கு இது உதவுகிறது. சிபிஎஸ்இ பள்ளி கூடங்களில் இந்தி போதிக்கப்படுகிறது. அரசியலில் இருப்பவர்கள் நடத்தும் கல்வி நிறுவனங்களிலும் இந்தி போதிக்கப்படுகிறது. எந்த மொழியை பாடமாக்கலாம் என்பதும், படிக்கலாம் என்பதும் மாணவர்களின் விருப்பம். உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் பல்வேறு ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த பணிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது. அடுத்த ஓராண்டுக்குள் சேலத்தில் உலக தமிழ்மாநாட்டை முதலமைச்சர் நடத்துவார். இவ்வாறு அவர் கூறினார்.