இரண்டு டன் ரேஷன் அரிசி பறிமுதல் எழும்பூர் ரெயில்வே போலீசார் விசாரணை

சென்னை

சென்னை, டிச.4: திருச்சியிலிருந்து ஹவுராவுக்கு செல்லும் ரெயிலில் கேட்பாரற்று கிடந்த 2 டன் ரேஷன் அரிசியை எழும்பூர் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்திவருகின்றனர். திருச்சியிலிருந்து சென்னை வழியாக ஹவுராவுக்கு வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில் சென்றுவருகிறது. இந்த ரெயிலில் ரேஷன் அரிசி கடத்திவரப்படுவதாக சென்னையில் உள்ள உணவு பாதுகாப்பு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த நிலையில், திருச்சியிலிருந்து நேற்றிரவு சென்னை எழும்பூருக்கு வந்தடைந்த அந்த ரெயிலில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள், எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் பத்மகுமார் தலைமையிலான ரெயில்வே போலீசார் சோதனையிட்டனர்.

5-வது பிளாட்பாரத்தில் நின்ற அந்த ரெயிலில், அதிகாரிகள் சோதனையிட்டபோது, ஒரு பெட்டியில் 60 கிலோ எடையுடைய 33 மூட்டைகள் மற்றும் 10 கிலோ எடையுடைய 2 மூட்டைகள் இருந்தது. அதனை பிரித்தபார்த்தபோது ரேஷன் அரிசி என்பது உறுதியானது.
கேட்பாரற்று கிடந்த 2 டன் எடையுடைய ரேஷன் அரிசியை எழும்பூர் ரெயில்வே போலீசார் பறிமுதல் செய்தனர். யார் அவற்றை ரெயிலில் ஏற்றிவைத்தது? யாருக்கு அவற்றை டெலிவரி செய்ய உள்ளனர்? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.