குழந்தை கடத்தலை தடுக்க புதிய கருவி டேக் அணியாதவர் குழந்தையை தொட்டால் ஒலி எழுப்பும்

தமிழ்நாடு

விழுப்புரம்,டிச.4: விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுக்க புதிய கருவி அமைக்கப்பட்டுள்ளது.இந்த கருவி டேக் அணியாதவர்கள், செவிலியர்கள் கூட குழந்தையை வார்டை விட்டு வெளியே தூக்கி வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும் என்று கல்லூரி முதல்வர் தெரிவித்துள்ளார். விழுப்புரம் முண்டியம்பாக்கத்தில் உள்ள விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் குழந்தை கடத்தலை தடுக்க ரூ.11.50 லட்ச மதிப்பில் வாங்கப்பட்ட நுண் அதிர்வெண் அடையாள கருவி பொருத்தப்பட்டது. இந்த கருவி நேற்று முதல் மருத்துவமனை வார்டில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவிதேவி தலைமை தாங்கி கருவியை இயக்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நலப்பிரிவு துறை தலைவர் பிரபாகரன் மற்றும் குழந்தை மருத்துவர்கள், செவிலியர்கள் கலந்துகொண்டனர். இதுகுறித்து கல்லூரி முதல்வர் டாக்டர் குந்தவிதேவி நிருபர்களிடம் கூறியதாவது:- தற்போது மருத்துவமனைகளில் குழந்தை கடத்தலை தடுக்கும் வகையில் தமிழக அரசின் சுகாதார துறை மற்றும் மருத்துவ கல்வி இயக்குனரகம் இணைந்து விழுப்புரம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நுண் அதிர்வெண் கருவி அமைக்கப்பட்டுள்ளது. மகப்பேறு பிரிவில் குழந்தை பிறந்தவுடன் குழந்தை, தாய், உதவியாளர் விவரங்களை ஐ.எம்.எஸ். என்ற செல்போன் செயலியில் சேமித்து தனித்தனியாக குழந்தைக்கும், தாய்க்கும், உதவியாளருக்கும் டேக் (அடையாள குறியீடு) அணிவிக்கப்படும். வார்டில் இருந்து இந்த டேக் அணிந்து குழந்தையை வெளியே எடுத்துச் செல்லும்போது வார்டு முன்புள்ள நுழைவு பகுதியில் உள்ள “ஆன்டெனா’ மூலம் சென்சார் செய்யப்படும். டேக் அணிந்து செல்லும்போது எச்சரிக்கை அலாரம் ஒலிக்காது. டேக் அணியாதவர்கள், செவிலியர்கள் கூட குழந்தையை வார்டை விட்டு வெளியே தூக்கி வந்தால் எச்சரிக்கை ஒலி எழுப்பும்.

மேலும் குழந்தை, தாய், உதவியாளர் புகைப்படமும் இங்குள்ள வீடியோ திரையில் தெரியும். வேறு நபர்கள் யாரேனும் வார்டின் உள்ளே நுழைந்தாலும், தாய், குழந்தையின் நகர்வுகளை கண்காணிக்க வசதியாக இந்த கருவி பொருத்தப்பட்டுள்ளது. இதனால் மருத்துவமனையின் மகப்பேறு பிரிவில் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு குழந்தை கடத்தலை தடுக்கப்படுவதுடன் தாய்மார்கள், ஊழியர்களுக்கு பாதுகாப்பு மற்றும் மன அமைதியை ஏற்படுத்தும் வகையில் இக்கருவி பொருத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.