காஞ்சிபுரம், டிச.4: காஞ்சிபுரம் அருகே உள்ள ஏனாத்தூர் செயல்பட்டு வரும் சந்திரசேகரேந்திர நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தில் பன்னாட்டு கருத்தரங்கம் நடைபெற்றது. இந்த கருத்தரங்கிற்கு துணைவேந்தர் எஸ். வீரராகவன் தலைமை வகித்தார்.
அமெரிக்காவின் பெர்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் பி.வி ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அறிவியல் துறை புலத் தலைவர் எஸ். பாலாஜி, இயற்பியல் துறை தலைவர் சி. வி. வெங்கடகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இயற்பியல் துறை தலைவர் கே. வெங்கட்ரமணன் வரவேற்றுப் பேசினார். அதனைத்தொடர்ந்து கருத்தரங்கில் பெர்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறை பேராசிரியர் பி.வி. ராமச்சந்திரன் பேசியதாவது:- பாக்டீரியாக்களும், ‘போரான் வேதிப்பொருளும்’ என்ற தலைப்பில் பேசி,மனித உடலில் தீமைகளை விளைவிக்கக் கூடிய பாக்டீரியாக்களை அழிப்பதற்கான வேதிப்பொருளை அமெரிக்காவில் உள்ள பெர்டியூ பல்கலைக்கழக வேதியியல் துறை கண்டுபிடித்துள்ளது.
அவற்றை முதல்முதலாக எலிகளுக்கு கொடுத்து பரிசோதிக்கப் பட்டு வெற்றியும் காணப்பட்டது. அந்த வேதிப்பொருள் உடலில் நல்ல பாக்டீரியாக்கள் இருந்தால் அவற்றை அழிக்காது. இதற்கு போரான் 27 என பெயரிடப்பட்டுள்ளது. இந்த வேதிப்பொருளை மருந்தாக்கி குறைவான விலைக்கு தர முடியும். இது பரவலாக மருந்து கடைகள் மூலம் விரைவில் சந்தைக்கு வர இருக்கிறது. இதற்கு மாற்று மருந்து இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை என்றார். உதவி பேராசிரியர் பி. ராகவேந்திரன் நன்றி கூறினார்.