‘ஜெயலலிதா வழி நடப்போம்’ நினைவிடத்தில் இபிஎஸ், ஓபிஎஸ் மற்றும் அதிமுக தலைவர்கள் உறுதிமொழி ஏற்றனர்

TOP-1 சென்னை முக்கிய செய்தி

சென்னை, டிச.5: எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதா வழியில்,கட்சியை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம் என்று ஜெயலலிதா சமாதி முன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் அதிமுகவினர் உறுதிமொழியேற்றனர். ஜெயலலிதா வழியில் தொடர்ந்து நடப்போம் என்றும் அவர்கள் சூளுரைத்தனர். தமிழக முதலமைச்சராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்து, ‘இரும்புப் பெண்மணி’ என்று எல்லோராலும் அழைக்கப்பட்ட ஜெயலலிதா மறைந்து மூன்று ஆண்டுகள் ஓடிவிட்டன. இவரது மூன்றாம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதனையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

காலை 10 மணியளவில் சென்னை வாலாஜா சாலையில் இருந்து அதிமுகவின் அமைதி ஊர்வலம் தொடங்கியது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, செங்கோட்டையன் உள்ளிட்ட அமைச்சர்கள், அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்கள் என பல்லாயிரக்கணக்கான அதிமுகவினர் இதில் கலந்து கொண்டனர். ஓபிஎஸ், இபிஎஸ் உள்பட அமைச்சர்கள், தொண்டர்கள் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். பெண் நிர்வாகிகள் மற்றும் மகளிர் கருப்பு புடவை அணிந்து பங்கேற்றனர். வாலாஜா சாலை வழியாக பல்லாயிரக்கணக்கான தொண்டர்களுடன் இபிஎஸ், ஓபிஎஸ் தலைமையில் கலைவாணர் அரங்கம், எழிலகம் வழியாகச் சென்ற இந்த அமைதி ஊர்வலம் இறுதியாக மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவிடத்தை அடைந்தது.

அங்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இணைந்து கண்ணீர் மல்க மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் அமைச்சர்கள், நிர்வாகிகள் மலர்தூவி மரியாதை செலுத்தியதுடன், கீழே விழுந்து வணங்கினர். நினைவிடம் அருகே அமைக்கபட்டிருந்த மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் கட்சியையும் ஆட்சியையும் தடம்பிரளாமல் காப்பாற்ற வேண்டுமென உறுதிமொழியை வாசிக்க, அதனை மற்றவர்கள் வழிமொழிந்து கூறினர். தொடர்ந்து 2 நிமிட மவுன அஞ்சலியும் செலுத்தப்பட்டது.

உறுதி மொழி விபரம் வருமாறு:-
ஜெயலலிதா முதல்வராக இருந்த காலகட்டத்தில் தமிழ்நாடு அடைந்திட்ட வளர்ச்சிகளை, மக்களுக்கு எந்நாளும் எடுத்துக் கூறிட, உறுதி ஏற்கிறோம். எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுகவை, ஆயிரம் காலத்துப் பயிராக நிலைபெற செய்த ஜெயலலிதா வழியில், கட்சி பணிகளை தொடர்ந்து ஆற்றிடுவோம். 34 ஆண்டுகள் தன்னையே அர்ப்பணித்து பணியாற்றிய, ஜெயலலிதாவின் தியாகத்தை மக்கள் மத்தியில் எடுத்துக் கூறுவோம். ஜெயலலிதா கட்டளையை ஏற்று, கழகம் நமக்கு என்ன செய்தது ? என்பதைவிட, கழகத்திற்கு நாம் என்ன செய்தோம்? என்ற கேள்வியை நம் இதயத்தில் எழுப்பி, ஒற்றுமையுடனும், உறுதியுடனும் கட்சிப்பணிகளை ஆற்றிடுவோம்.

அதிமுக அரசு, மேற்கொண்டிருக்கும் மக்கள் நலப்பணிகளை பட்டி தொட்டி எங்கும் எடுத்துரைப்போம். தமிழக மக்களிடையே, கழக அரசுக்கும், மென்மேலும் நல்லாதரவு பெருகிட, அயராது பணியாற்றுவோம். ஜெயலலிதா அமைத்து தந்த கழக அரசினை வெற்றிமேல் வெற்றி பெறச் செய்வோம். ஜெயலலிதா வழியில் கட்சியின் உண்மைத் தொண்டராகவும், நம்பிக்கைக்குரிய விசுவாசியாகவும், தொடர்ந்து உழைத்திடுவோம். இடைத்தேர்தலில் பெற்ற வெற்றி போல எதிர்வரும் உள்ளாட்சி தேர்தலில், மாபெரும் வெற்றி பெற்று, ஜெயலலிதா வழியில்,கட்சியை வெற்றிச் சிகரத்தில் வீற்றிருக்கச் செய்வோம். காப்போம், காப்போம் கழகத்தைக் காப்போம், வெல்வோம், வெல்வோம் களம் அனைத்திலும் வெல்வோம்

ஊர்வலத்தில் கலந்துகொள்வதற்கு முன்னதாக சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள அலங்கரிக்கப்பட்ட ஜெயலலிதாவின் படத்திற்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
ஜெயலலிதாவின் 3-ம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி மெரீனாவில் உள்ள அவரது சமாதி அதிமுகவின் சின்னமான இரட்டை இலையை வடிவமைக்கப்பட்டிருந்தது. மேலும் ரோஜா உள்ளிட்ட மலர்களால் ஜெயலலிதா சமாதி அலங்கரிக்கப்பட்டிருந்தது. அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, பட்டினபாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து கடற்கரை சாலைக்கு வரும் வாகனங்கள் தடை விதிக்கப்பட்டு, போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டிருந்தது. மேலும் அசம்பாவிதம் தவிர்க்கும் பொருட்டு ஏராளமான போலிசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.