9 மாவட்டங்களில் தேர்தல் தள்ளிவைப்பு? பகல் 2 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் மீண்டும் விசாரணை

TOP-2 இந்தியா முக்கிய செய்தி

புதுடெல்லி, டிச.5: உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து திமுக தொடர்ந்த வழக்கை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்து 9 மாவட்டங்களில் தேர்தலை தள்ளி வைக்கலாமா என்பது குறித்து பிற்பகல் 2 மணிக்கு பதிலளிக்குமாறு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட்டது. மேலும் ஊரகப் பகுதிகளுடன் நகர்ப்புற பகுதிகளுக்கும் தேர்தலை நடத்தலாமா என்பது குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது. தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரு கட்டமாக தேர்தல் நடைபெறும் என கடந்த 2-ம் தேதி மாநிலத் தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதன்படி, நாளை வேட்பு மனு தாக்கல் தொடங்குகிறது.

இந்நிலையில், வார்டு மறுவரையறை பணி இன்னும் முடிவடையவில்லை என்றும், புதிதாக தொடங்கப்பட்ட 4 மாவட்டங்களில் பழைய மாவட்டங்களின் அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது என்றும் உச்ச நீதிமன்றத்தில் திமுக மனு தாக்கல் செய்திருந்தது.
இந்த மனு உள்ளிட்ட பிற 12 மனுக்களையும் சேர்த்து உச்ச நீதிமன்றம் இன்று காலை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. திமுக சார்பில் வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி ஆஜராகி, புதிதாக பிரிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களுடன் சேர்த்து மொத்தம் 9 மாவட்டங்களின் வார்டுகள் மறுவரையறை, இட ஒதுக்கீடு மற்றும் சுழற்சி போன்ற பணிகள் இன்னும் செய்யப்படவில்லை. இந்நிலையில் தேர்தல் தேதி அறிவித்தது சட்ட விரோதமானது எனக் கூறினார்.

இதற்கு பதிலளித்த மாநில தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர், 2011 மக்கள்தொகை அடிப்படையில் வார்டு வரையறை பணி ஏற்கனவே முடிவடைந்து விட்டது. எனவே தேர்தலை நடத்த தடை விதிக்கக் கூடாது என்று வாதிட்டார். இருதரப்பு வாதங்களை கேட்ட தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே தலைமையிலான அமர்வு பல்வேறு கேள்விகளை எழுப்பியது. 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை புதிதாக செய்தீர்களா? அதை செய்யாதது ஏன்? என்று தலைமை நீதிபதி கேள்வி எழுப்பியதுடன், சட்டத்தை மதித்து நடக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தினார்.

பின்னர் ஒன்பது மாவட்டங்களை உள்ளாட்சி தேர்தலை தள்ளி வைக்கலாமா என்பது குறித்து மாநில தேர்தல் ஆணையம் பதிலளிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இது தவிர ஊரக பகுதிகளுடன் சேர்த்து நகர் பகுதிகளுக்கும் தேர்தல் அறிவிக்கலாமா என்பதற்கு தமிழக அரசிடம் கேட்டு பதிலளிக்குமாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இதனிடையே புதிய மாவட்டங்களில் தேர்தலை தள்ளிவைக்க தமிழக அரசு பரிந்துரை செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனிடையே 9 மாவட்டங்களில் மட்டும் தேர்தலை தள்ளி வைக்கலாம் என்ற தமிழக அரசின் பரிந்துரைக்கு திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.