தமிழர்களை மீட்க உடனடி நடவடிக்கை பிரதமர் மோடிக்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி கடிதம்

TOP-5 சென்னை முக்கிய செய்தி

சென்னை, டிச.5: சூடான் நாட்டில் உள்ள தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட விபத்தில் 18 பேர் பலியாகி உள்ளனர். இவர்களில் தமிழர்களும் இருப்பதாக அஞ்சப்படுகிறது. மீட்பு பணியை துரிதப்படுத்தி தமிழர்கள் பற்றிய விவரங்களை அறிய ஏற்பாடு செய்ய வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பி உள்ளார். இதுகுறித்து, முதல்வர் பழனிசாமி புதன்கிழமை எழுதியுள்ள கடிதத்தின் விவரம்:- சூடானில் செராமிக் ஆலையில் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தில் பலர் பலியாகி இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன. அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த மூன்று பேர் காணாமல் போனதாகவும், மூன்று பேர் கடுமையான காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் அறியப்படுகிறது.

எனவே, பாதிக்கப்பட்ட நபர்களின் விவரங்களைத் தெரிவிக்க சூடானில் உள்ள இந்திய தூதரகத்துக்கு வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் மூலமாக உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும். காணாமல் போன நபர்கள் குறித்த அடையாளம் காணவும், கடுமையான காயங்களுடன் உள்ளவர்களுக்கு சிறப்பான மருத்துவ சிகிச்சைகளும் அளிக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் தாங்கள் தனிப்பட்ட முறையில் உடனடியாகத் தலையிட வேண்டும் என்று தனது கடிதத்தில் முதல்வர் பழனிசாமி கேட்டுக் கொண்டுள்ளார்.