தஞ்சாவூர், டிச.5: தஞ்சையில் உள்ள சிகலாவின் வீடு பழமை அடைந்து இடியும் நிலையில் உள்ளதால் அதை உபயோகப்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் இடிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தஞ்சை மானம்புச்சாவடி எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் 10,500 சதுர அடி பரப்பளவில் சசிகலாவுக்கு சொந்தமான இடத்தில் வீடு உள்ளது. அந்த வீட்டில் மனோகர் என்பவர் தனது மனைவியுடன் வசித்து வந்தார். இந்த வீடு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது.
இதை இடிக்க வேண்டும் என வீட்டின் உரிமையாளர் சசிகலா, கட்டிட உபயோகிப்பாளர் மனோகர் ஆகியோருக்கு மாநகராட்சி ஆணையர் ஜானகி ரவீந்திரன் கடந்த செப்டம்பர் மாதம் அறிவிப்பு நோட்டீஸ் அனுப்பி இருந்தார்.

அதில், இந்த அறிவிப்பு கிடைத்த 15 தினங்களுக்குள் கட்டிடத்தை அப்புறப்படுத்த தவறும்பட்சத்தில் சேத, இழப்பீடுகளுக்கு கட்டிட உபயோகிப்பாளர் மற்றும் கட்டிட உரிமையாளரே முழு பொறுப்பாவார்கள் என கூறப்பட்டு இருந்தது. ஆனால் கட்டிடம் அகற்றப்படாததால் தஞ்சை தாசில்தார் வெங்கடேசன், மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ராஜசேகரன், உதவி பொறியாளர் மகேந்திரன் மற்றும் அதிகாரிகள் நேற்று எஸ்.பி.ஜி. மிஷன் உயர்நிலைப்பள்ளி ரோட்டில் உள்ள சசிகலாவுக்கு சொந்தமான வீட்டிற்கு வந்தனர்.

அங்கு இருந்த மனோகரிடம் அதிகாரிகள் விசாரித்தனர். அப்போது, சென்னையில் உள்ள சசிகலாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவித்து விட்டேன். பழுதடைந்த வீட்டில் யாரும் வசிக்கவில்லை. நாய்கள் மட்டும் தான் உள்ளன. நாங்கள் பின்பகுதியில் உள்ள வீட்டில் தங்கி இருக்கிறோம் என்றார். பின்னர் வீட்டில் தங்கியிருந்த மனோகரிடம் மாநகராட்சி அதிகாரிகள் நீங்கள் உடனே வீட்டை காலி செய்யுங்கள். ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் என்ன செய்ய முடியும்?. உரிய நபரிடம் கூறி வீட்டை விரைவில் இடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினர்.