அதிமுக வேட்பாளர் பட்டியல் தயாராகிறது சென்னையில் இன்று மாலை மாவட்ட செயலாளர்கள் கூட்டம்

அரசியல் சென்னை

சென்னை, டிச.6: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களின் கூட்டம் சென்னையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் இன்று கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் நடைபெறுகிறது. இதில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் பட்டியலை தயாரிக்கும் பணி தொடங்கும் என தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது.

தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30 தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறும் என்று தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ஊரகப் பகுதிகளுக்கான தேர்தல் மட்டுமே தற்போது நடைபெறும் என்றும் நிர்வாக காரணங்களுக்காக மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சிகளின் தேர்தல்கள் பின்னர் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த நிலையில் புதிதாக அறிவிக்கப்பட்ட மாவட்டங்களின் வார்டு வரையறை செய்யப்பட்ட பின்னரே தேர்தல் நடத்தப்படவேண்டும் என்று வலியுறுத்தி தி.மு.க. தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெறுகிறது.

சென்னையில் உள்ள அ.தி.மு.க. தலைமைக்கழக அலுவலகத்தில் இன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் இந்த கூட்டத்தில் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் உள்ளாட்சித்தேர்தல் குறித்து விரிவான விவாதங்கள் நடைபெறவுள்ளது.

ஊராட்சிகளுக்கு நடைபெறவுள்ள தேர்தலில் அதிமுக சார்பில் ஏற்கனவே பெறப்பட்ட விருப்பமனு பெறப்பட்டது. பெறப்பட்ட மனுகளில் இருந்து வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி அந்தந்த மாவட்டங்களில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் தலைமையில் கடந்த 2 தினங்களாக நடைபெற்ற நிலையில், இன்று ஓபிஎஸ், இபிஎஸ் தலைமையில் நடைபெறவுள்ள மாவட்ட செயலாளர் கூட்டத்தில் ஊராட்சிகளில் நடைபெறவுள்ள அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிகிறது. மேலும் ஊராட்சிகளில் நடைபெறும் தேர்தல் பணிகுழு அமைச்சர்கள் தலைமையில் அமைக்கப்படும் எனவும் தெரிகிறது.