ரெயில் நிலையத்தில் பெண் ஊழியரை கடத்த முயற்சி 3 பெண்களை கைது செய்து விசாரணை

குற்றம் சென்னை

சென்னை, டிச.6: கிண்டி ரெயில் நிலையத்தில் ரெயில்வே பெண் ஊழியரை கடத்த முயன்ற வழக்கில் 3 பெண்களை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
சென்னை வேளச்சேரி வெங்கடேஷ்வரா நகரை சேர்ந்தவர் வெங்கடேஷ். இவரது மனைவி சுபாஷினி (வயது 42). இவர் மாம்பலம் ரெயில் நிலையத்தில் ஊழியராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை கிண்டி ரெயில் நிலையம் அருகே நடந்து சென்றார். அப்போது முகமூடி அணிந்த ஒரு பெண் மற்றும் ஆண் ஆகிய இருவரும் தாங்கள் போலீஸ் என்று கூறி சுபாஷினியை கடத்த முயன்றனர்.

அவர்களிடம் இருந்து தப்பிய சுபாஷினி, கிண்டி ரெயில் நிலையம் உள்ளே சென்றார். அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அந்த நபரை மட்டும் மடக்கி பிடித்தனர். அவருடன் வந்த பெண் தப்பியோடினார். விசாரணையில் அவரது பெயர், வியாசர்பாடியை சேர்ந்த ஜீவானந்தம் (வயது 52) என்றும், சொந்தமாக கார் ஒட்டிவருவதாவும் தெரியவந்தது. அவர் போலீசில் அளித்த வாக்குமூலத்தில், பெரம்பூரை சேர்ந்த பாலகுரு மற்றும் இரண்டு பெண்கள் போலீசார் என்று கூறி தன்னுடன் காரில் வந்து திருடியை பிடிக்க போகிறோம் என்று சொல்லி அந்த பெண்ணை பிடிக்க முயன்றோம் என்று அவர் தெரிவித்தார்.

இவர் கொடுத்த தகவலின் பேரில் பாலகுருவை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கை இன்ஸ்பெக்டர் கர்ணன் தலைமையிலான கிண்டி குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர். மேலும், சுபாஷினியை கடத்த முயன்றது தொடர்பாக, முத்துலெட்சுமி, வதனி, தமிழ்செல்வி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர். ஏற்கனவே இருந்த முன்விரோதத்தில் சுபாஷினியை மிரட்டுதற்காக போலீஸ் போல் நடித்து அவரை கடத்த முயன்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட 3 பெண்களிடமும் போலீசார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர்.