சென்னை, டிச.7: ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கு புதிய அட்டவணை தயாரிப்பதில் மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்வதற்கான அரசாணையும் இன்று ª வளியிடப்பட்டது. தமிழகத்தில் டிசம்பர் 27 மற்றும் 30 தேதிகளில் இரு கட்டமாக நடைபெறுவதாக இருந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் நேற்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

அதில் புதிதாக பிரித்து அமைக்கப்பட்ட 9 மாவட்டங்கள் நீங்கலாக பிற மாவட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என கூறப்பட்டது. இதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய ஒன்பது மாவட்டங்களில் மட்டும் தேர்தல் நடைபெறாது. மேலும் ஏற்கனவே வெளியிடப்பட்ட தேர்தல் அறிவிப்பாணைக்கு பதிலாக புதிய அறிவிப்பாணையை வெளியிட வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து ஏற்கனவே வெளியான தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் வாபஸ் பெற்றுக்கொண்டது. இதைத் தொடர்ந்து முந்தைய அறிவிப்பாணையை ரத்து செய்வதற்கான அரசாணையும் இன்று காலை வெளியிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை அடுத்து சென்னை அரும்பாக்கத்தில் உள்ள மாநில தேர்தல் ஆணையர் அலுவலகத்தில் நேற்றும், இன்றும் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆணையர் ஆர்.பழனிசாமி, செயலாளர் சுப்பிரமணியன், சட்ட ஆலோசகர் பாலமணிகண்டன் ஆகியோர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதன் பின்னர் தேர்தல் ஆணையர் தலைமைச் செயலகத்துக்கு சென்று தலைமைச் செயலாளர் சண்முகம், ஊரக வளர்ச்சித்துறை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் எஸ்.பழனிசாமி ஆகியோருடன் ஆலோசனை நடத்தினார். இன்று சனிக்கிழமை விடுமுறை நாள் என்ற போதிலும் மாநில தேர்தல் அதிகாரிகள் பணிக்கு வரவழைக்கப்பட்டனர்.
அவர்களுடன் இன்று இரண்டாவது நாள் ஆலோசனை நடைபெற்றது. புதிய தேர்தல் அட்டவணை எந்த நேரமும் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி 37 மாவட்டங்களில் ஒன்பது மாவட்டங்கள் நீங்கலாக 28 மாவட்டங்களில் தேர்தல் நடைபெற வேண்டும். மாவட்ட பஞ்சாயத்து வார்டுகள், ஊராட்சி ஒன்றிய வார்டுகள் ஆகியவற்றுக்கான கவுன்சிலர்கள், ஊராட்சிகள் மற்றும் ஊராட்சி கவுன்சிலர்கள் ஆகிய பதவிகளுக்கு நேரடித் தேர்தல் நடத்தப்பட வேண்டும். வாக்காளர்களுக்கு நான்கு வண்ணங்களில் வாக்குச்சீட்டுகள் வழங்கப்படும். ஏற்கனவே டிசம்பர் 6-ம் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்குவதாக இருந்தது. மறு உத்தரவு வரும்வரை வேட்பு மனுக்களை பெற வேண்டாமென மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

டிசம்பர் கடைசியில் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை என்பதால் ஜனவரி முதல் வாரம் அல்லது இரண்டாவது வாரத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது.