சென்னை, டிச.7: சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி உள்ள தர்பார் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் இன்று மாலை நடைபெறுகிறது. ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘தர்பார்’. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியுள்ள இப்படத்தில் ரஜினி நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார்.

தர்பார் படத்தின் படப்பிடிப்புகள் முடிவடைந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி வைரலானது. மேலும் சும்மா கிழி என்ற பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இன்று மாலை சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இந்த விழா நடைபெற உள்ளது. இதில் ரஜினி உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்கின்றனர். மேலும் தென்னிந்திய முன்னணி நடிகர்களும் கலந்துக் கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.