போதை சாக்லெட்டுகள் பறிமுதல்: 3பேர் கைது கஞ்சா, ஜார்தாவும் கைப்பற்றப்பட்டன

குற்றம் சென்னை

சென்னை, டிச.7: போதை சாக்லெட்டுகளை ரெயில் மூலம் கொண்டுவந்து சென்னையில் விற்பனை செய்ய முயன்ற வடமாநில வாலிபர்களை சென்ட்ரல் ரெயில் நிலையத்திலேயே போலீசார் கையும் களவுமாக கைது செய்தனர். சென்ட்ரல் ரெயில் நிலையம் 11-வது பிளாட்பாரம் அருகே 3 வடமாநிலத்தவர்கள் சந்தேகத்திற்கிடமான வகையில் சுற்றித்திரிந்துக் கொண்டிருந்துள்ளனர். இதனை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசார் கண்டறிந்து, அவர்களின் பேக்குகளை பிரித்து சோதனையிட்டுள்ளனர்.

அதில், 8 பாக்கெட் கஞ்சா, 40 பாக்கெட் ஜார்தா, 200 போதை சாக்லெட்டுகள் இருந்ததை அறிந்து அவற்றை பறிமுதல் செய்தனர். அவர்களை மூவரையும் பிடித்து, பூக்கடை போலீசில் ஒப்படைத்தனர். அவர்களை பூக்கடை போலீசார் கைது செய்து விசாரிக்கையில், ஷான்வாஸ் (வயது 35), மகன்குமார் (வயது 18), பாபுகுமார் (வயது 19) என்பதும், பீகாரை சேர்ந்த இவர்கள் வால்டாக்ஸ் ரோட்டில் தங்கியிருந்து வேலை பார்ப்பவர்களுக்கு போதை மற்றும் புகையிலை பொருட்களை சப்ளை செய்ய வந்துள்ளனர் என்பதும் தெரியவந்தது.

இதேபோல், வில்லிவாக்கத்தை சேர்ந்த சுரேஷ்பாபு (வயது 55) என்பவர், கடைகளுக்கு மிட்டாய்கள் விநியோகிக்கும் வேலை பார்த்துவந்துள்ளார். அப்போது, மிட்டாய்களுடன் கூடவே, தடைசெய்யப்பட்ட பான்மசாலா பாக்கெட்டுகளையும் அவர் சப்ளை செய்து வந்தது தெரியவந்ததையடுத்து, சுரேஷ்பாபுவை கைது செய்த வில்லிவாக்கம் போலீசார், அவரிடம் இருந்து 37 கிலோ எடையுடைய ஹான்ஸ் பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர்.

இதனிடையே, நகரின் பல்வேறு பகுதிகளில் கஞ்சா விற்பதாக எழுந்த புகாரின்பேரில், சூளை மேட்டை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியின் கூட்டாளியான ஐ.சி.எப். அம்பேத்கர் நகரை சேர்ந்த விஜய் (வயது 20), கீழ்ப்பாக்கம் கார்டனை சேர்ந்த பிரேம் குமார் (வயது 24), உதயகுமார் (வயது 23) ஆகிய 3 பேரை பிடித்து ஐசிஎப் போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.