சென்னை, டிச.9: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை இணையதள தொடராக வெளியிடுவதற்கு தடை கோரிய தீபாவின் மனுவுக்கு டிசம்பர் 11- ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு, இந்தி நடிகை கங்கனா ரனாவத் நடிக்க “தலைவி” என்ற பெயரில் தமிழிலும், இந்தியில் ஜெயா என்ற பெயரிலும் படத்தை இயக்குனர் ஏ.எல். விஜய்யும், நடிகை ரம்யா கிருஷ்ணன் நடிக்கும் குயின் என்ற இணையதள தமிழ் தொடரை இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனும் இயக்கி வருகின்றார்.
இந்நிலையில் தனது அனுமதியில்லாமல் தலைவி, ஜெயா, குயின் ஆகிய பெயரில் திரைப்படம் தயாரிக்கவோ, விளம்பரம் செய்யவோ, திரையிடவோ கூடாது. அதற்கு தடை விதிக்கக்கோரி ஜெயலலிதாவின் அண்ணன் ஜெயகுமாரின் மகளான ஜெ. தீபா, சென்னை உயர்நீதிமன்றத்தித்தில் உரிமையியல் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில், ஜெயலலிதாவின் கண்ணியத்திற்கும், தனது வாழ்க்கைக்கும் பாதிப்பில்லாமல் இந்த திரைக்கதைகள் எழுதப்பட்டிருக்கிறதா? என்பதை சரிபார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தீபா தரப்பில், ‘ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு திரைப்படமாக தயாரிக்கும் பணிகள் தற்போதுதான் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆனால் இணையதள தொடர்களாக தயாரிக்கப்பட்டவை வரும் சனிக்கிழமை வெளியிட உள்ளதாக தகவல் வந்துள்ளது. ஆகையால், தன் மனு மீது இடைக்கால உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

அப்போது இயக்குனர் கவுதம் வாசுதேவ்மேனன் தரப்பில், தீபா தொடர்ந்த வழக்கின் ஆவணங்கள் இதுவரை தங்களுக்கு வழங்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
இவற்றை பதிவு செய்து கொண்ட நீதிபதி, வழக்கு ஆவணங்களை கவுதம் வாசுதேவ் மேனனுக்கு உடனடியாக கொடுக்க தீபா தரப்புக்கும், பின்னர், அந்த மனுவுக்கு பதில் மனு தாக்கல் செய்யும்படி கவுதம் வாசுதேவ்மேனன் தரப்புக்கும் உத்தரவிட்டு வழக்கை வரும் டிசம்பர் 11ம் தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.