சென்னை,டிச.10: தமிழகத்தில் தொழில் வளர்ச்சியை ஏற்படுத்த பொற்காலத்தை உருவாக்கி இருக்கிறோம். இதை பயன்படுத்தி முதலீடு செய்யுங்கள் என அமெரிக்க- இந்திய தொழில் கூட்டமைப்பு கூட்டத்தில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.

தமிழகத்தில் தொழில் முதலீடுகள் தொடங்குவது குறித்து துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வத்துடன் அமெரிக்க- இந்திய தொழில் கூட்டமைப்பின் தொழில் முதலீட்டாளர்கள் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டனர். இந்த ஆலோசனையில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பேசியதாவது: உலக முதலீட்டாளர் மாநாட்டின் மூலம் 43 மில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புள்ள முதலீடுகளை கவரும் வகையில் 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையைழுத்தாகியது. அடுத்து நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர் மாநாட்டின் வெற்றியில் அமெரிக்க இந்திய தொழில் கூட்டமைப்பு பெரும் பங்காற்றும் என நம்புகிறோம்.

தமிழக தொழில் துறையில் நிலவும் முன்னேறிய தொழில் நுட்பம் மற்றும் தொழில் சார்ந்த சுற்றுச்சூழல் போன்றவற்றால் 250க்கும் மேற்பட்ட அமெரிக்க கம்பெனிகளில் அமேசான், ஐபிஎம்,ஃபாக்ஸ்கான் கேட்டர்பில்லர்,மற்றும் போயிங் போன்ற உலகப் புகழ்பெற்ற கம்பெனிகள் தமிழகத்தில் முதலீடுகளை செய்துள்ளனர். தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள தொழிற்பூங்கா தகவல் தொழில்நுட்ப பூங்கா, மற்றும் மருத்துவ பூங்காக்களில் ஏறக்குறைய 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலம் தொழில் தொடங்குவதற்கு வழங்குவதற்கு தயாராக உள்ளது.

தமிழகத்தில் முதலீட்டாளருக்கு ஏற்ற சூழலை மேம்படுத்தவும் தொழில் வளர்ச்சி பெருகும் துறை ரீதியாக கொள்கை முயற்சிகளை அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. 2018 ஆம் ஆண்டிலிருந்து புதிய தகவல் தொழில்நுட்பக் கொள்கை, புதிய தொழில் தொடங்குதல் மற்றும் புதிய கண்டுபிடிப்புகள் கொள்கை, உணவு பதப்படுத்தும் கொள்கை, டெக்ஸ்டைல்ஸ் கொள்கை, எரிசக்தி கொள்கை ஆகியவற்றை மட்டுமின்றி மின் பேருந்து கொள்கையும் தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழ்நாட்டில் தற்போது தொழில் வளர்ச்சியின் புதிய பொற்காலம் நிலவுகிறது தொழில் புரிவதற்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழகம் தயார் நிலையில் உள்ளது. தமிழ் நாட்டின் வளர்ச்சி பாதையில் அனைவரும் இணைந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.