ஸ்ரீஹரிகோட்டா, டிச.11:  ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளத்தில் இருந்து பிஎஸ்எல்வி ராக்கெட் வரிசையில் 50-வது ராக்கெட்டான பி.எஸ்.எல்.வி சி 48 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. இதில் அனுப்பப்பட்ட 10 செயற்கைக்கோள்களும் புவிவட்ட பாதையில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.

ராணுவப் பாதுகாப்பு மற்றும் புவி கண்காணிப்புக்கு உதவும் வகையில் வடிவமைக்கப்பட்ட ரிசாட்-2பி ஆர்1 செயற்கைக்கோளுடன், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவண் விண்வெளி ஆய்வு மையத்தின் முதல் ஏவு தளத்திலிருந்து இன்று பிற்பகல் 3.25 மணி அளவில் விண்ணில் பி.எஸ்.எல்.வி சி48 ராக்கெட் விண்ணில் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. மேலும் அதில் அனுப்பப்பட்ட பத்து செயற்கைக் கோள்களும் புவிவட்ட பாதையில் நிலைநிறுத்தப்பட்டது.

628 கிலோ எடைகொண்ட ரிசாட்-2பி ஆர்1 செயற்கைக்கோள், வேளாண், வனக் கண்காணிப்பு, பேரிடர் மேலாண்மை மற்றும் ராணுவப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கு உதவும் வகையில் அனுப்பப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் புவியிலிருந்து 576 கி.மீ. தொலைவிலான சுற்றுவட்டப் பாதையில் 37 டிகிரி கோணத்தில் நிலை நிறுத்தப்படும்.

இந்த செயற்கைக்கோளுடன் வர்த்தக ரீதியிலான 9 செயற்கைக்கோள்களும் விண்ணில் ஏவப்படுகின்றன. இதில், அமெரிக்காவுக்குச் சொந்தமான 6 செயற்கைக்கோள்களும், இஸ்ரேல், இத்தாலி மற்றும் ஜப்பான் நாடுகளின் தலா ஒரு செயற்கைக்கோளும் அடங்கும் என இஸ்ரோ அதிகாரிகள் தெரிவித்தனர்.
என்பது குறிப்பிடத்தக்கது.