மும்பை, டிச.12:  விண்டீசுக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றிய இந்தியா, பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளது.

மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த இந்த போட்டியில், இந்திய அணியின் நட்சத்திரங்களான ரோஹித், ராகுல், கோலி ஆகியோரின் வெளுத்து வாங்கியதில் இந்திய அணி 67 ரன்கள் வித்தியாசத்தில் வெஸ்ட் இண்டீஸை வீழ்த்தி, 2-1 என்ற கணக்கில் டி20 தொடரை வென்றது. அத்துடன் பல்வேறு சாதனைகளையும் நிகழ்த்தி இந்திய ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளனர், இந்திய வீரர்கள்.

விராட்டின் அதிவேக அரைசதம்:
தனது அதிரடி ஆட்டத்தின் மூலம் எதிரணியை தெறித்து ஓட செய்த விராட் கோலி, 21 பந்துகளில் அரைசதம் கடந்தார். இதன்மூலம், அதிவேக அரைசதம் எடுத்த 5வது வீரர் என்ற பெருமைக்கு விராட்கோலி சொந்தமாகியுள்ளார். நேற்றைய ஆட்டத்தில் மொத்தம் 29 பந்துகளில் 7 சிக்சர்கள், 4 பவுண்டரிகள் உட்பட 70 ரன்களை விளாசி இறுதிவரை ஆட்டமிழக்காமல் அசரவைத்தார், கோலி.
டாப் 3 ஹீரோக்கள்:

இந்த போட்டியில் தொடக்க வீரர்கள் ரோஹித் (71), ராகுல் (91) மற்றும் கேப்டன் கோலி (70) ஆகிய 3 வீரர்களுமே 70 ரன்களுக்கும் மேல் அடித்து நொறுக்கினர். டி20 வரலாற்றிலேயே, முதல் மூன்று டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களும் அதிக ரன்களை (70 ரன்களுக்குமேல்) கடந்திருப்பது இதுவே முதல் முறையாகும்.

அதிகபட்ச ஸ்கோர்:
போட்டி நடந்த வான்கடே மைதானத்தில் இந்திய அணி அதிகபட்ச ஸ்கோர் (240 ரன்கள்) இதுவாகும். அத்துடன், டி20-ல் இது மூன்றாவது அதிகபட்ச ஸ்கோராகும்.

400 சிக்சர்கள் அடித்த முதல் இந்தியர்:
இந்த போட்டியில் 5 சிக்சர்கள் உட்பட 71 ரன்கள் எடுத்தார், ரோஹித். இதன்மூலம், 404 சிக்சர்களுடன் 400-க்கும் அதிகமான சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் ரோஹித் 4-ம் இடம் பிடித்துள்ளார். மேலும், 400 சிக்சர்கள் விளாசிய முதல் இந்தியர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ள ரோஹித், இந்த சாதனையை அதிவேகத்தில் கடந்தவர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.