சென்னை, டிச.12: பிஎஸ்எல்வி சி-48 ராக்கெட்டை விண்ணில் ஏவியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய சாதனையை படைத்திருப்பதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாராட்டி அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

நாட்டின் பாதுகாப்பு, இயற்கை வளங்கள் ஆய்வு போன்றவற்றிற்காக 11.12.2019 அன்று, 50-வது பி.எஸ்.எல்.வி ராக்கெட் இஸ்ரோ விஞ்ஞானிகளால் வெற்றிகரமாக விண்வெளியில் செலுத்தப்பட்ட நிகழ்வு, இந்திய திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்துள்ளது. பி.எஸ்.எல்.வி சி-48 ராக்கெட்டை விண்ணில் செலுத்தியதன் மூலம் இஸ்ரோ விஞ்ஞானிகள் புதிய மைல் கல்லை எட்டியுள்ளனர்.

பி.எஸ்.எல்.வி ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்காக அல்லும் பகலும் அயராது பாடுபட்ட இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆகியோரது முயற்சியும், உழைப்பும் மிகவும் பாராட்டுக்குரியது.

இந்தச் சாதனை இளைய தலைமுறையினரை உற்சாகப்படுத்தி, அவர்களை விண்வெளி ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கும். இஸ்ரோ தலைவர், விஞ்ஞானிகள், பொறியாளர்கள் மற்றும் பணியாளர்கள் பற்பல சாதனைகள் படைத்து, நம் தாய்திருநாட்டிற்கு மேலும் பெருமை சேர்த்திட இத்தருணத்தில் என் சார்பாகவும் தமிழ்நாட்டு மக்கள் சார்பாகவும், மனதார வாழ்த்துகிறேன்.

இவ்வாறு முதல்வர் அந்த வாழ்த்து செய்தியில் கூறியிருக்கிறார்.