சென்னை, டிச.14: பெயிண்டரிடம் நூதன முறையில் நகைப்பறித்த ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
தண்டையார்பேட்டை கீரைத்தோட்டத்தை சேர்ந்தவர் ரவி (வயது 50). பெயிண்டரான இவருக்கு திருநின்றவூரை சேர்ந்த மகேஷ் (வயது 52) என்னும் ஆட்டோ டிரைவர் கடந்த சில நாட்களுக்குமுன்பு அறிமுகமாகியுள்ளார். தனக்கு தெரிந்த ஒருவர் நுங்கம்பாக்கத்தில் உள்ளதாகவும், அவரை சந்தித்தால் பெரிய ஆர்டர் கிடைக்கும் என்று கூறி ரவியை தனது ஆட்டோவிலேயே அழைத்துச் சென்றுள்ளார்.

நுங்கம்பாக்கம் சென்றதும், ரவி அணிந்திருந்த ஒரு சவரன் தங்க சங்கிலியை கழற்றி தன்னிடம் கழற்றி தந்துவிட்டு செல்லும்படி கூறியுள்ளார், மகேஷ். இதனைகேட்டு திகைத்து நின்ற ரவியை, நகைகள் அணிந்து சென்றால் ஆர்டர் கிடைப்பது கடினம் என்றுகூறி நயவஞ்சகமாக பேசி, சமாளித்துவிட்டு, நகையை வாங்கிக்கொண்டுள்ளார், மகேஷ்.

ஆர்டர் கேட்க சென்ற ரவியை, அப்படி யாரும் இல்லை என்று கூறி திரும்பி அனுப்பியுள்ளனர். தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தபடியே வெளியில் வந்த ரவிக்கு மேலும் ஒரு அதிர்ச்சி காத்திருந்தது,
ஆட்டோவுடன் வெளியில் காத்திருந்த மகேஷூம் தனது நகையுடன் காணாமல் போக, போலீசில் புகார் அளித்துள்ளார், ரவி. உதவி கமிஷனர் முத்துவேல் பாண்டி மேற்பார்வையிலான நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மகேஷை கைது செய்தனர்.

இதேபாணியில் மகேஷ் வடசென்னையின் பல்வேறு பகுதிகளில் பலரிடம் கைவரிசை காட்டியது போலீசார் நடத்திய விசாரணையில் தெரியவந்தது.