சென்னை, டிச.14: ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை மறுதினம் முடிவடைகிறது. 17-ந் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்படும். வாபஸ் பெறுவதற்கு 19-ந் தேதி கடைசி நாளாகும். இன்று சனிக்கிழமை என்ற போதிலும் வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்றது.

தமிழ்நாட்டில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27 மற்றும் 30-ந் தேதிகளில் நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. இன்று சனிக்கிழமை என்ற போதிலும் வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. நாளை ஞாயிற்றுக்கிழமை வேட்பு மனு தாக்கல் இருக்காது.
நேற்று வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 71,763 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. கிராம பஞ்சாயத்து வார்டு உறுப்பினர் பதவிக்கு 47,243 மனுக்களும், ஊராட்சி தலைவர் பதவிக்கு 17,255 மனுக்களும், ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் பதவிக்கு 6,642 மனுக்களும், மாவட்ட ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 623 மனுக்களும் என மொத்தம் 71,763 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இன்றும் பல்வேறு இடங்களில் மனு தாக்கல் மும்முரமாக நடைபெற்றது. அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர்கள் பட்டியல் வெளியிடப்பட்டு வருவதால் இன்று வேட்புமனு தாக்கல் அதிகரித்தது. நாளை மறுதினம் (திங்கள்) மனு தாக்கல் முடிவடைகிறது. 17-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். மனுக்களை திரும்ப பெற டிசம்பர் 19-ந் தேதி கடைசி நாளாகும். 27,30-ல் வாக்குப்பதிவு நிறைவடைந்த பிறகு ஜனவரி 2-ல் வாக்கு எண்ணிக்கையும் தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்பது ஜனவரி 6-ல் நடைபெறும். ஜனவரி 11-ந் தேதி மறைமுக தேர்தல் மூலம் மாவட்ட ஊராட்சி தலைவர்கள், துணைதலைவர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் கிராம ஊராட்சி துணை தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர். மறைமுக தேர்தல் மூலம் மொத்தம் 10,306 பதவி இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.

வேட்பு மனு தாக்கலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன என்பதால் ஒவ்வொரு இடங்களிலும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள் மற்றும் ஒன்றிய அலுவலகங்களில் வேட்பு மனு தாக்கலுக்கு ஏராளமானோர் குவிந்தனர். தேர்தலை பார்வையிட நியமிக்கப்பட்ட ஐஏஎஸ் அதிகாரிகள் குழுவுடன் மாநில தேர்தல் ஆணையர் ஆர்.பழனிசாமி நேற்று ஆலோசனை நடத்தினார். இதன் பின்னர் தேர்தல¢ ஆணையம் வெளியிட்ட செய்தி குறிப்பில், வேட்பு மனு பரிசீலனையின் போது விருப்பு, வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல் நடுநிலையுடன் நடந்து கொள்ள வேண்டும். பார்வையாளர்கள் இதை உறுதி செய்வதுடன் நடத்தை நெறிமுறைகள் முழுமையாக கடைப் பிடிக்கப்படுகின்றனவா என்பதையும் கண்காணிக்க வேண்டும்.

மேலும் வாக்கு எண்ணும் மையங்களில் முறையான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளனவா என்பதையும் இப்போதே உறுதி செய்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.