சென்னை, டிச.16: முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஒருநாள் பயணமாக வருகிற 19ம் தேதி காலை டெல்லி செல்கிறார். அங்கு பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரையும் சந்தித்து பேசுகிறார்.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவிட பணிகள் முடிவடையவுள்ள நிலையில், ஜெயலலிதா மணி மண்டபத்தை திறந்து வைக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதல்வர் அழைப்பு விடுக்க உள்ளதாக தெரிகிறது.

காந்தியடிகளின் 150வது பிறந்த நாளை சிறப்பாக கொண்டாட அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசு உத்தரவிட்டிருந்தது. இதுதொடர்பான ஆலோசனைக் கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் நடக்கிறது. இதில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொள்கிறார். மேலும் பிரதமர் மோடியை முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனியாக சந்தித்து பேசுகிறார். இதற்காக நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அண்மையில் தமிழகத்திற்கு 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்துள்ளது. அதற்கு பிரதமர் மோடிக்கு இந்த சந்திப்பின் போது எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவிக்கிறார்.

மேலும் தமிழகத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் பிரதமரிடம் எடப்பாடி பழனிசாமி எடுத்து வைப்பார் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் பல்வேறு திட்டங்களுக்கு நிதி ஒதுக்கவும் அவர் வேண்டுகோள் விடுக்க உள்ளார். அதே போல வருகிற பிப்ரவரி மாதம் 24ம் தேதி ஜெயலலிதா பிறந்தநாள் வர இருக்கிறது. அன்றைய தினம் சென்னை மெரினாவில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நினைவாக கட்டப்பட்டு வரும் மணி மண்டபத்தை பிரதமர் மோடி திறந்து வைக்க வேண்டும் என்றும் முதல்வர் அழைப்பார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போதைய அரசியல் சூழல் குறித்து இந்த சந்திப்பின் போது இருவரும் ஆலோசிப்பார்கள் என தெரிகிறது. இதுபோல, உள்துறை அமைச்சர் அமித்ஷா, நிதித் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் ஆகியோரையும் தனித்தனியாக முதல்வர் எடப்பாடி பழனிசாமி சந்தித்து பேசுகிறார்.

இந்த சந்திப்பின்போது தமிழகத்திற்கு ஒதுக்கப்பட வேண்டிய நிதிகள் தொடர்பாகவும், அதனை உடனடியாக தமிழகத்திற்கு மத்திய அரசு வழங்க வேண்டுமெனவும் முதல்வர் நிதியமைச்சரை வலியுறுத்துவார் என்றும் தெரிகிறது.
அன்று இரவே முதல்வர் சென்னை திரும்புவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.