உன்னாவ் வழக்கு: பிஜேபி முன்னாள் எம்எல்ஏ உட்பட 9 பேர் குற்றவாளி

TOP-1 இந்தியா

புதுடெல்லி, டிச.16:  உத்தரப் பிரதேசம் மாநிலம் உன்னாவ் பகுதியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் பிஜேபி முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் உட்பட 9 பேர் குற்றவாளிகள் என டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தண்டனை விவரம் வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.
பிஜேபி முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்காரால் தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக உத்தரப் பிரதேச மாநிலம், உன்னாவ் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 2017-ல் புகார் அளித்தார். பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியதாக குறிப்பிட்ட காலகட்டத்தில் அவர் 17 வயது சிறுமியாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த விவகாரத்தில் குல்தீப் செங்கார் கடந்த ஆண்டு கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் அந்தப் பெண் தனது உறவினர்களுடன் சென்றுகொண்டிருந்த கார் மீது லாரி மோதி விபத்து நேர்ந்ததில் அவர் படுகாயமடைந்தார். அவரது உறவினர்கள் இருவர் உயிரிழந்தனர்.

இதில் பாதிக்கப்பட்ட அந்த பெண் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இந்த விபத்து விவகாரம் தொடர்பாக குல்தீப் செங்கார் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டது. எனினும் அந்த வழக்கு விசாரணையின் நிறைவில் அவர் விடுவிக்கப்பட்டார்.
வழக்கின் இறுதிகட்ட விசாரணை டெல்லி மாவட்ட நீதிபதி தர்மேஷ் சர்மா முன்னிலையில் கடந்த வாரம் நடைபெற்றது. அப்போது, வழக்கு விசாரணையை மேற்கொண்ட சிபிஐ தரப்பும், குற்றம்சாட்டப்பட்டுள்ள குல்தீப் செங்கார் தரப்பும் தங்களது இறுதி வாதத்தை முன்வைத்தன. அவற்றைக் குறித்துக்கொண்ட நீதிபதி தர்மேஷ் சர்மா, தீர்ப்பை வரும் 16-ம் தேதி வழங்குவதாக அறிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று டெல்லி நீதிமன்றத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது. அதன்படி இன்று நீதிபதி தர்மேஷ் சர்மா தீர்ப்பை அளித்தார்.
நீதிபதி தர்மேஷ் சர்மா தனது தீர்ப்பில் பிஜேபி முன்னாள் எம்எல்ஏ குல்தீப் செங்கார் உட்பட 9 பேர் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும் தண்டனை விவரம் வரும் 19-ம் தேதி அறிவிக்கப்படும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.