சென்னை, டிச.17: சிலைக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 14 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டுவர உத்தரவிடக்கோரிய மனுவுக்கு பதிலளிக்கும்படி மத்திய தொல்லியல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புராதனம் மற்றும் கலை பொக்கிஷங்கள் பாதுகாப்பு சட்டத்தின்படி, சிலைக் கடத்தலில் ஈடுபடுவோருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்க முடியும். அதேபோல், அச்சட்டத்தின் 26-வது பிரிவின்படி, மத்திய அரசின் அதிகாரி மட்டுமே வழக்குப்பதிவு செய்ய முடியும்.

இந்த சட்டப் பிரிவுகளில் திருத்தம் கொண்டுவர உத்தரவிடக்கோரி சென்னை சிஐடி நகரைச் சேர்ந்த ஸ்ரீதரன் என்பவர், சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில், கும்பகோணத்தில் உள்ள சிலைக்கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் 531சிலைக்கடத்தல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. 2012 முதல் 2018 ம் ஆண்டு வரை 26 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, அதில் 102 பேர் கைது செய்யப்பட்டும், ஆயிரத்து 125 சிலைகள் மீட்கப்பட்டுள்ளது.

சிலைக்கடத்தலில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் தண்டனையானது குறைவானது. 100 ஆண்டுகள் பழைமையான, கோடிக்கணக்கான மதிப்புள்ள சிலைகளை கடத்துபவர்களுக்கான சிறை தண்டனையை குறைந்தபட்சம் அபராதத்துடன் 10 ஆண்டுகள் அல்லது அதிகபட்சமாக 14 ஆண்டுகள்வரை அதிகரிக்க வேண்டும்.

தொல்லியல் துறையில் போதுமான அதிகாரிகள் இல்லாத காரணத்தால் கடத்தப்பட்ட சிலைகளை பறிமுதல் செய்வது, வழக்குகள் பதிவு செய்வது போன்ற நடவடிக்கைகளை ஆய்வாளர் நிலைக்கு குறையாத அதிகாரிகள் மேற்கொள்ளும் வகையில் உரிய சட்டத்திருத்தம் கொண்டுவர மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள், சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் கொண்ட பெஞ்சில் விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்த வழக்கு தொடர்பாக, பிப்ரவரி மாதம் 5 ம் தேதிக்குள் பதிலளிக்கும்படி மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.