இஸ்லாமாபாத், டிச.17: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் பர்வேஸ் முஷாரப் மீது தொடரப்பட்ட தேசத்துரோக வழக்கில் அவருக்கு பெஷாவர் நீதிமன்றம் தூக்குத்தண்டனை விதித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.

ராணுவ தளபதியாக இருந்த முஷாரப், நவாஸ் ஷெரீப் ஆட்சியை கவிழ்த்துவிட்டு ஆட்சியை கைப்பற்றினார். 2007-ம் ஆண்டு அவசரநிலை பிரகடனம் செய்தார். இதை எதிர்த்து 2011-ம் ஆண்டு அவர் மீது தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டது. 2013-ம் ஆண்டு அவர் மீது குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டன.

அரசுத் தரப்பு வழக்கறிஞர் குற்றச்சாட்டுக்கான ஆதாரங்களை நீதிமன்றத்தில் எடுத்துவைத்தார். இந்த ஆண்டு நவம்பவர் மாதம் 19-ம் தேதி விசாரணை முடிவுற்றது. இன்று இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. முஷாரப்பிற்கு தூக்குத்தண்டனை விதிக்கப்படுவதாக நீதிபதிகள் அறிவித்தனர்.

விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்த நேரத்தில் தனக்கு உடல்நலக்கோளாறு இருப்பதாக கூறி முஷாரப் துபாய் சென்றார். அதன் பிறகு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. அவர் தலைமறைவு குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டார்.

அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் அவர் கைது செய்யப்படவில்லை. இந்த நிலையில் அவருக்கு தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவரை காவல்துறை கைது செய்து அழைத்து வருமா என்பது தெரியவில்லை.