சென்னை, டிச.17: வாக்கு வங்கி அரசியலுக்காகவே மத்திய அரசு குடியுரிமை சட்ட திருத்தத்தை கொண்டு வந்து இருப்பது சட்டப்பிழை என்றும், இதை எதிர்த்து மாணவர்கள் நடத்தும் போராட்டத்திற்கு மக்கள் நீதிமய்யம் ஆதரவு தரும் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார்.

ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் கமல்ஹாசன் இன்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

வாக்கு வங்கி அரசியலுக்கு எதிராக நாங்கள் சட்டப்போர் தொடுத்திருக்கிறோம், இதன் ஒரு கட்டமாகவே குடியுரிமை சட்ட திருத்தத்தை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம். யாரை திருப்திப்படுத்த இந்த சட்டதிருத்தத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். இதன் மூலம் எதை சாதிக்கப்போகிறார்கள் என்பது தெரியவில்லை.

இந்த விசயத்தில் போராடும் மாணவர்கள் மீது நடத்தப்படும் தாக்குதல் கருத்துரிமைக்கு எதிரானது. மாணவர்களின் போராட்டத்தை மக்கள் நீதி மய்யம் ஆதரிக்கம், நாட்டில் வேலை வாய்ப்புகளே இல்லை. அதை செய்ய வேண்டிய அரசு மக்களை திசைதிருப்ப முயலுகிறது. தேசவிரோத சக்திகளுக்கு எதிரான வீழ்ச்சி தொடங்கிவிட்டது. எங்களை நேருக்குநேர் சந்திக்க பயப்படுகிறவர்கள் எங்கள் காலுக்கு அடியில் பாம்புகளை விடுகிறார்கள். பாம்புகளை கண்டு அஞ்சும் இளைஞர் படை நாங்கள் அல்ல.

பாகிஸ்தானில் இந்துக்களுக்கு, வழங்கப்படும் நீதி இலங்கை இந்துக்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை. இந்த விசயத்தில் இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்யப்படுகிறது. இது யாருக்கும் எதிரான சட்டம் இல்லை என்ற உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறுகிறார். அவர் பிடித்த முயலுக்கு மூன்றே கால் என்பதுதான் அவரது நிலைப்பாடு. மக்களிடம் அதிகாரம் இருக்கும் வரை தான் அது ஜனநாயகம். இது இல்லை என்றால் அது தனிநாயகமாகிவிடும். இதை எதிர்த்து நாங்கள் தொடர்ந்து போராடுவோம்.

இவ்வாறு அவர் கூறினார்.