சேலம், டிச.18: இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க மத்திய அரசை வலியுறுத்துவோம் என்று சேலத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
‘மத்திய அரசின் குடியுரிமைச் சட்டத்தால் இந்தியர்களுக்கு பாதிப்பு இல்லை’ என்றும் முதல்வர் விளக்கம் அளித்தார்.

சேலம் விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களிடம் இன்று கூறியதாவது:-
மகாத்மா காந்தியின் 150-வது பிறந்த நாள் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் பாரத பிரதமர் கலந்து கொள்ள வேண்டும் என கடிதம் எழுதியிருந்தார். இவ்விழாவில் நம்முடைய குடியரசு தலைவர், பிரதமர், மத்திய மந்திரிகள், இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலத்தில் இருக்கின்ற முதல்-அமைச்சர்களும் கலந்து கொள்கின்றனர். அந்த நிகழ்ச்சியில் நானும் கலந்து கொள்கிறேன்.

கேள்வி: குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து தமிழக அரசின் நிலைபாடு என்ன?
பதில்: குடியுரிமை சட்டம் குறித்து தெளிவுபடுத்தி விட்டார்கள். பாரத பிரதமர், உள்துறை மந்திரி தெளிவாக விளக்கம் கொடுத்து விட்டார்கள்.
குடியுரிமை சட்டத்தை பொறுத்தவரைக்கும், இந்தியாவில் வாழ்கின்ற இந்தியர்களுக்கு எந்தவித பாதிப்பும் கிடையாது. அது எந்த மதத்தினராக இருந்தாலும் சரி. எவருக்கும் பாதிப்பு இல்லை என்று தெளிவான கருத்தை அவர்கள் விளக்கமாக தெளிவாக, அனைத்து ஊடகங்கள் வாயிலாக, பத்திரிகையின் வாயிலாக, பாராளுமன்றத்தின் வாயிலாக தெரிவித்து இருக்கின்றார்கள்.

இதில், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், பங்காளதேஷ் ஆகிய நாடுகளில் வசிக்கும் இந்துக்கள், சீக்கியர்கள், கிறிஸ்தவர்கள், சமணர்கள், பாசிகர்கள், பவுத்தர்கள் போன்ற சிறுபான்மையினர் மத பிரச்சனையின் காரணமாக அந்த நாடுகளில் இருந்து பாதுகாப்பு கருதி இந்தியாவிற்கு வரும் நிலை ஏற்படுகின்றது. அவ்வாறு வரும் அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து அவர்கள் 5 ஆண்டுகள் வசித்து வருவோர்களானால் அவர்களுக்கு மத்திய அரசினுடைய சில நிபந்தனைகளின் அடிப்படையில் இந்திய குடியுரிமை அளிக்க வகை செய்யும் திருத்த சட்டம் என தெளிவாக சொல்லி இருக்கிறார்கள். இதில் எந்த இந்தியர்களும் பாதிக்கப்படுவதாக இல்லை.
ஆகவே, இந்த குடியுரிமை திருத்த சட்டத்தை பொறுத்த வரைக்கும் இந்தியாவில் வசிக்கும் எந்த ஒருவருக்கும், எந்த மதத்தினருக்கும் எவ்வித பாதிப்பும் கிடையாது. இதை மத்திய அரசு தெளிவாக தெரிவித்து விட்டது.

2-வது, தமிழகத்தில் வாழ்கின்ற இலங்கை தமிழ் மக்களை பொறுத்தவரைக்கும், ஏற்கனவே, அம்மா இருந்த காலக்கட்டத்தில் 2016-ம் ஆண்டு, சட்டமன்ற பொதுத்தேர்தல் முடிந்த பிறகு பிரதமரை சந்தித்த போது, ஜெயலலிதா இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என அப்போதே கோரிக்கை வைத்தார்கள்.
ஜெயலலிதா மறைவிற்கு பிறகு, நான் பிரதமரை சந்தித்தபோதும், ஜெயலலிதா வலியுறுத்திய அந்த கோரிக்கையை பிரதமரிடத்திலேயே வலியுறுத்தி இருக்கின்றேன். கோரிக்கை மனுவும் அளிக்கப்பட்டு இருக்கின்றது.

இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு இருக்கின்றது. அதோடு, குடியுரிமை திருத்த சட்டம் இப்போது பாராளுமன்றத்தில் அறிமுகப்படுத்தியபோது, அ.தி.மு.க. சார்பாக பேசப்பட்ட மேலவை உறுப்பினர்கள் இதை தெளிவுபடுத்தி இருக்கின்றார்கள். இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்துள்ள இலங்கை வாழ் மக்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வேண்டும் என்று அவர்கள் பேசியுள்ளனர்.

இன்றைய தினம் வேண்டும் என்றே திட்டமிட்டு மு.க.ஸ்டாலின் ஒரு பொய்யான செய்தியை தமிழகத்திலே சொல்லிக் கொண்டிருக்கிறார். நேற்றைய தினம் கூட காஞ்சிபுரத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே அவர் கீழ்தரமாக பேசி இருக்கின்றார். ஏதோ, அ.தி.மு.க. அரசு இலங்கை தமிழர்களுக்கு துரோகம் விளைவித்ததாக ஒரு குற்றச்சாட்டை சொல்லி இருக்கின்றார். இது
அத்தனையும் முழு பொய். 2009-ல் தி.மு.க. தலைவர் கருணாநிதி முதல்-அமைச்சராக இருந்த காலம். மத்தியிலே காங்கிரஸ் தலைமையிலான அமைச்சரவையில் தி.மு.க. இடம்பெற்றிருந்தது.
அந்த காலக்கட்டத்தில் இலங்கையில் போர் நடந்து கொண்டிருந்தது. அந்த போரை நிறுத்த வேண்டும் என்று கருணாநிதி உண்ணாவிரதம் மேற்கொண்டார். அந்த உண்ணாவிரதத்தை ஒரு மணி நேரத்தில் முடித்துக் கொண்டார்.

அதன் பிறகு நிருபர்களிடம் இலங்கையில் போர் நிறுத்தம் செய்யப்பட்டு விட்டது. யாரும் அச்சப்பட தேவையில்லை என்ற ஒரு பொய்யான செய்தியை அவர் வெளியிட்டார்.
இவ்வாறு அவர் கூறினார்.