விசாகப்பட்டினம், டிச.19: ஓராண்டில் அதிகபட்ச சதங்களை விளாசியதன் மூலம் ஹிட்மேன் ரோஹித் சர்மா, கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் சாதனையை நெருங்கியுள்ளார். மேலும், விண்டீசுக்கு எதிரான நேற்றைய போட்டியில் அவர் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார்.

விண்டீசுக்கு எதிராக விசாகப்பட்டினத்தில் நேற்று நடந்த 2-வது ஒருநாள் போட்டியில் 107 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி அபார வெற்றி பெற்றது. தொடக்க வீரராக களமிறங்கி 159 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வித்திட்ட ரோஹித் சர்மாவுக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது. தனக்கு கிடைக்கும் வாய்ப்பை பயன்படுத்தி, மற்றவர்கள் வியக்கும் அளவிற்கு சாதனை நிகழ்த்திவரும் ஹிட்மேன் ரோஹித் நேற்றைய போட்டியிலும் மிச்சம் வைக்காமல் சாதனை பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார், இந்த போட்டியில் அவர் அடித்த சதம் மூலம், இந்த ஆண்டில் (2019) 7 ஒருநாள் சதங்களை விளாசி அவர் சாதனை புரிந்துள்ளார். 1998-ம் ஆண்டில் சச்சின் டெண்டுல்கர் தன் உச்சகட்ட பார்மில் இருந்த போது ஒரே ஆண்டில் 9 சதங்களை அடித்து சாதனையை வைத்துள்ளார், தற்போது ரோஹித் அவருக்கு அடுத்தபடியாக உள்ளார்.

இந்த ஆண்டில் ரோஹித் சர்மா அனைத்து வடிவங்களிலும் எடுக்கும் 10-வது சதம் இதுவாகும். இதில் 3 டெஸ்ட் சதங்களும் அடங்கும். ரோஹித்தின் 159 ரன்கள் இந்த ஆண்டின் அதிகபட்ச ஒருநாள் ஸ்கோராகும். 2013 முதல் 7 ஆண்டுகள் அவர் அந்த ஆண்டின் அதிகபட்ச ஸ்கோரை எடுத்தவராக இருந்து வருகிறார். 227- ரன்களுடன் ரோஹித்-ராகுல் கூட்டணி 4வது பெரிய தொடக்கக் கூட்டணியாக உள்ளது. இந்த போட்டியில் இந்திய அணி எடுத்த 387 ரன்கள், இந்தியாவின் 9-வது மிகப்பெரிய ஒருநாள் ஸ்கோராகும். வெஸ்ட் இண்டீஸுக்கு எதிராக 2வது பெரிய ஸ்கோராகும்.

குஷியில் குல்தீப்:
குல்தீப் யாதவ் இந்தப் போட்டியில் எடுத்த ஹாட்ரிக் விக்கெட் மூலம் ஒருநாள் போட்டிகளில் 2வது ஹாட்ரிக் சாதனை புரிந்தார். 2017-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஹாட்ரிக் சாதனை புரிந்தார் குல்தீப் யாதவ். வாசிம் அக்ரம், சக்லைன் முஷ்டாக், சமிந்தா வாஸ், ட்ரெண்ட் போல்ட் ஆகியோர் ஒருநாள் போட்டிகளில் 2 ஹாட்ரிக் சாதனைகள் புரிந்துள்ளனர். இந்த பட்டியலில் இலங்கையின் லஷித் மலிங்கா 3 ஹாட்ரிக்குகளுடன் முன்னிலை வகிக்கிறார்.