புதுடெல்லி, டிச.19: டெல்லி சென்றுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆகியோரை இன்று சந்தித்து பேசவுள்ளார்.
தமிழகத்தின் பல்வேறு முக்கிய திட்டங்கள் குறித்தும், நிதித் தேவைகள் குறித்தும் பிரதமரிடம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்துகிறார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தலைமையில் மகாத்மா காந்தியின் 150-வது பிறந்தநாள் கொண்டாட்டம் குறித்த மாநாடு இன்று பிற்பகலில் நடைபெறுகிறது.

ஜனாதிபதி மாளிகையில் நடைபெறும் இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள், மாநில முதலமைச்சர்கள் பங்கேற்கவுள்ளனர்.
இதில் கலந்து கொள்வதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் இருந்து டெல்லிக்கு இன்று காலை புறப்பட்டுச் சென்றார். டெல்லி விமான நிலையம் சென்றடைந்த அவருக்கு பூங்கொத்து கொடுத்தும், பொன்னாடை போர்த்தியும் அதிமுக எம்பிக்களும், நிர்வாகிகளும் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.

இதையடுத்து டெல்லியிலுள்ள தமிழ்நாடு இல்லத்துக்கு முதலமைச்சர் சென்றார். அங்கு அவருக்கு அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்டோர் வரவேற்பு அளித்தனர். இதையடுத்து பாதுகாப்புப் படை வீரர்கள் அளித்த மரியாதையை முதலமைச்சர் ஏற்றுக் கொண்டார்.

டெல்லியில் இன்று மாலை பிரதமர் மோடியை எடப்பாடி பழனிசாமி சந்தித்துப் பேசுகிறார். தமிழகத்துக்கு 9 மருத்துவ கல்லூரிகளுக்கு அனுமதி அளித்ததற்கு நன்றி தெரிவிப்பதுடன், தமிழக அரசின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை அவர் அளிக்கவுள்ளார். ஜிஎஸ்டி மூலம் தமிழகத்துக்கு மத்திய அரசு தர வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க கோருவதுடன், புதிதாக கட்டப்படும் ஜெயலலிதா நினைவிடத்தை திறந்து வைக்க வேண்டும் என அழைப்பு விடுப்பார் எனவும் கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சந்திப்பார் என்று கூறப்படுகிறது.

இந்த நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு நாளை அதிகாலை 4 மணியளவில் முதல்வர் எடப்பாடி சென்னை வருகை தரவுள்ளார்.
புதுடெல்லியில் கட்டப்பட்டு வரும் அதிமுக கட்சி அலுவலக பணிகளை முதலமைச்சர் முன்னதாக பார்வையிட்டார். அவருடன் அமைச்சர் டி.ஜெயக்குமார் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடன் சென்றனர்.

இதனிடையே தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று புதுடெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டார். மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற்றது. தமிழகத்துக்கு கூடுதல் நிதியை ஒதுக்க வேண்டும் என்று துணை முதல்வர் மத்திய நிதியமைச்சரிடம் நேரில் வலியுறுத்தினார்.