சென்னை, டிச.19: வருகிற 24-ம் தேதி அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்ஜிஆரின் 32-வது நினைவுநாளை முன்னிட்டு அவருக்கு மரியாதை செலுத்துவதுடன், அவரது நினைவிடத்தில் உறுதிமொழி ஏற்க அனைவரும் திரண்டு வருமாறு ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக தொண்டர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

இதுகுறித்து கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
அதிமுக நிறுவனத் தலைவர் எம்ஜிஆர் நம்மை ஆற்றொணத் துயரத்தில் ஆழ்த்திவிட்டு அமரர் ஆகிய நாள் 24.12.1987. எம்ஜிஆரின் 32-வது ஆண்டு நினைவு நாளான 24.12.2019 – செவ்வாய்க்கிழமை காலை 10.35 மணிக்கு, சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள எம்ஜிஆர் நினைவிடத்தில் ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதலமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தலைமையில் தலைமைக் கழக நிர்வாகிகளும், அமைச்சர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த உள்ளனர். அதனைத் தொடர்ந்து எம்ஜிஆருடைய நினைவிட வளாகத்தில் உறுதி மொழி ஏற்பபு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட செயலாளர்களும், அதிமுக நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், முன்னாள் அமைச்சர்களும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களும், அதிமுக, எம்ஜிஆர் மன்றம், அம்மா பேரவை, எம்ஜிஆர் இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர்கள் பிரிவு, சிறுபான்மையினர் நலப் பிரிவு, விவசாயப் பிரிவு, மீனவர் பிரிவு, மருத்துவ அணி, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுனர்கள் அணி, இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறை, தகவல் தொழில்நுட்பப்பிரிவு, வர்த்தக அணி மற்றம் கலைப்பிரிவு உட்பட கட்சியின் பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த நிர்வாகிகளும், கூட்டுறவுச் சங்கங்களின் பிரதிநிதிகளும், கட்சித் தொண்டர்களும் பொதுமக்களும் பெருந்திரளாய் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.