– கௌசல்யா ஜவஹர் –

பாவை நோன்பு
பாவை நோன்பு பற்றிய குறிப்புகளை மு.இராகவையங்கார் என்ற ஆராய்ச்சியாளர் தன் ஆராய்ச்சித் தொகுப்பில் கொடுத்துள்ளார். ஸ்ரீமத் பாகவதத்தில் தசமஸ்கந்தத்தில் 22- ஆம் அத்தியாத்தில் மார்கழியில் கண்ணனை அடைய கோபியர் மேற்கொண்ட பாவை நோன்பை எப்படி நோற்றார்கள் என்று விவரித்துள்ளார்.

கோபியர் மார்கழி மாதத்தில் காத்யாயணீ பூஜையாகிய விரதத்தை தொடங்கி, விடியலில் எழுந்து யமுனையில் நீராடி, ஈர நுண்மணல் கொண்டு காத்யாயணி தேவியின் உருவத்தை அமைத்து, சந்தனம், மலர், தூப, தீபம், நைவேத்யம் போன்றவற்றால் பூஜித்து கண்ணனை நாயகனாக அருள வேண்டியுள்ளார்கள். இது 30 நாட்கள் விரதமாக மேற்கொள்ளப்பட்டது.

சங்க காலத்தில் பாவை நோன்பு

தமிழகத்தில், சங்ககாலத்தில், ‘பாவை’ என்பது ‘பொம்மை’ என்ற பொருளில் வழங்கி வந்துள்ளது. மகளிர் கடற்கரையில் மணலால் பாவை செய்து விளையாடும் வழக்கத்திற்கு சான்றாக, பல சங்கத் தமிழ்ப் பாடல்கள் உண்டு. நெய்தல் நிலத்தில் மகளிர், பாவை போன்ற உருவத்தை அமைத்து, நோன்பு நோற்ற காரணத்தால் அந்நோன்பு ‘பாவை நோன்பு’ என வழங்கப்பட்டது. இந்நோன்பினை அடிப்படையாகக் கொண்ட பாடல்களைப் ‘பாவைப் பாடல்கள்’ என வழங்கினர்.

பாவையர் (கன்னிப் பெண்கள்) பாவையை முன் நிறுத்தி நோன்பு மேற்கொண்டதால், பாவையினர் பெயர் நோன்பிற்கு ஆகி அது நோன்பைப் பற்றிக் கூறும் நூலிற்கு ஆகி வந்தது.

இந்த பாவை நோன்பினை எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை ஆண்டாள் திருப்பாவையில் இரண்டாம் பாசுரத்தில் எடுத்துரைக்கிறாள். ‘விரதத்தின் பொழுது செய்ய வேண்டியவை, விடியலில் எழுந்து நீராடல், பரமனைப் பாடல், ஐயமும், பிச்சையும், ஆந்தனையும் கைகாட்டுதல் ஆகியவை. செய்யக்கூடாதவை, நெய்யுண்ணல், பாலுண்ணல், மையிட்டு அழகுபடுத்திக் கொள்ளுதல், மலரிட்டு கூந்தல் முடிதல், செய்யாதன செய்தல்

(தீய செயல்களை செய்யாதிருத்தல்) தீக்குறை சென்றோதல் (பிறர் பற்றி பொல்லாங்கு சொல்லுதல்) ஆகிய ஆறு செயல்கள். இவற்றை மேற்கொண்டு ஆண்டாள் 30 நாட்கள் பாவை நோன்பு நோற்று, பரமனைப்பாடி மகிழ்ந்த அனுபவத்தின் வடிவமே திருப்பாவை பாசுரங்கள்.

திருப்பாவை பாசுரம் _ 3

ஓங்கி உலகளந்த உத்தமன் பேர் பாடி

நாங்கள் நம்பாவைக்குச் சாற்றி நீராடினால்

தீங்கின்றி நாடெல்லாம் திங்கள் மும்மாரி பெய்து

ஓங்கு பெருஞ் செந்நொலூடு கயல் உகள

பூங்குவளைப் போதில் பொறிவண்டு கண்படுப்ப

தேங்காதே புக்கிருந்து சீர்த்த முலை பற்றி

வாங்கக் குடம் நிறைக்கும் வள்ளல் பெரும் பசுக்கள்

நீங்காத செல்வம் நிறைந்து ஏல் ஓர் எம்பாவாய்.