– கௌசல்யா ஜவஹர் –

திருப்பாவை – விலைமதிக்க முடியாத ரத்னமாலை

திருப்பாவை 30 பாசுரங்களைக் கொண்ட ஒரு பிரபந்தம். ஒவ்வொரு பாசுரமும் 8 அடிகள் கொண்டது. ‘‘ஏல் ஓர் எம்பாவாய்’’ என்று முடிகிறது. ‘‘எம்பிள்ளாய்!’’ இதைக்கேட்டு நினைப்பாயாக! என்பது இதன் பொருள்.

‘எம்பாவாய்’ என்பதற்கு ‘‘எங்கள் நோன்பு இது’’ என்றும் பொருள் கொள்ளலாம். இப்பிரபந்தம் ஆன்மா இறைவனை அடையும் நெறியையும், அதற்கு கைங்கர்யம் என்னும் தொண்டையும் வழியாகத் தெளிவுபடுத்துகிறது. திருப்பாவையின் அமைப்பை மூன்றாக பிரிக்கலாம்.

முதல் பகுதி:

முதல் ஐந்து பாசுரங்கள் பாயிரமாக அமைந்துள்ளன. இப்பகுதி நூலின் உயர்நிலை, நூற்பொருளைத் தெளித்துக்காட்டும் நாடி போன்றது. இது இறைநிலை பற்றியும், நோன்பு செய்தி பற்றிய தகவல்களையும் கொண்டதாக உள்ளது.

இரண்டாம் பகுதி:

6 முதல் 15 வரை உள்ள பத்துப்பாடல்கள் உறங்குகின்ற தோழிமார்களை எழுப்புவதாக அமைந்துள்ளன. இந்த பத்துப் பாடல்களுக்கும் செல்வம், செயல், குணம் என 10 வகைப்பட்ட ஆயர் சிறுமிகளை அஞ்ஞானத் துயிலிலிருந்து ஞான விழிப்பிற்குக் கொணர்வது வெளிப்படைப் பொருள். இதன் உள்ளுறைப் பொருள் பாகவதர்களைப் பள்ளி உணர்த்துவதாகவும், ஆழ்வார் பதின்மரை உணர்த்துவதுமாக அமைந்துள்ளது.

16 முதல் 21 வரை உள்ள பாடல்கள் கோயில் காப்பவன், வாயில் காப்பவன், நந்தகோபன், யசோதை, நப்பின்னை, கண்ணன், பலராமன் ஆகியோரைத் துயில் எழுப்புவதாகவும், 22 முதல் 25 வரை உள்ள பாடல்கள் கண்ணனை எழுப்பிய பின் அவனது அருட்பார்வையை வேண்டி நிற்பதாகவும் அமைந்துள்ளன.

மூன்றாம் பகுதி:
இறுதியாக வரும் 26 முதல் 30 வரை உள்ள பாடல்கள் கண்ணனிடம் வேண்டுவனவற்றைக் கேட்பதாகவும் அமைந்துள்ளன. ‘‘ஓம்’’ என்னும் பிரணவம், வைணவ மந்திரங்களாகிய திருமந்திரம், துவையம், சரமசுலோகம் என்பனவற்றைத் தன்னுள் கொண்டுள்ளதை போல, ‘‘மார்கழித் திங்கள்’’ எனத் தொடங்கும் முதற்பாசுரமும் மற்ற 29 பாசுரங்களின் பொருளையும் தன்னகத்தில் கொண்டுள்ளது.

இந்த விலை மதிப்பற்ற ரத்ன மாலையில் ஒரு மணி குறைந்தாலும், மாலையின் அழகு குறைவது போல், இம்முப்பது பாசுரங்களும் ஒரு பாசுரத்திற்கு மறு பாசுரம் ஒளி கூட்டுவதாகவும் அமைந்துள்ளது.

திருப்பாவை பாசுரம் _ 4

ஆழிமழைக் கண்ணா! ஒன்று நீ கைகரவேல்

ஆழியுள் புக்கு முகந்து கொடு ஆர்த்தேறி

ஊழி முதல்வன் உருவம் போல் மெய் கறுத்துப்

பாழியந் தோளுடைய பற்பநாபன் கையில்

ஆழிபோல் மின்னி வலம்புரிபோல் நின்றுஅதிர்ந்து

தாழாதே சார்ங்கம் தொடுத்த சரமழைபோல்

வாழ உலகினில் பெய்திடாய், நாங்களும்

மார்கழி நீராட மகிழ்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.