சென்னை, டிச.20: உள்ளாட்சித் தேர்தல் முடியும் வரை, பொங்கல் பரிசாக ரூ. 1,000 வழங்குவதற்கு தடை விதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

இந்த மனுவை அவசர வழக்காக எடுத்து இன்று மதியம் விசாரிப்பதாக நீதிபதி சத்யநாராயணன் தலைமையிலான பெஞ்ச் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் வரும் 27, 30 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.

இந்நிலையில், திருவண்ணாமலையைச் சேர்ந்த அலமேலு என்பவர் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், உள்ளாட்சி தேர்தல் முடியும்வரை, ரூ. 1,000 பொங்கல் பரிசு வழங்குவதற்கு தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

உள்ளாட்சி தேர்தலுக்கு பிறகு பொங்கல் பரிசு வழங்கப்படுமென, மதுரை உயர் நீதிமன்ற கிளையில் தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது, வாய்மொழி உத்தரவாக மட்டுமே இருப்பதால் உரிய உத்தரவுகள் பிறப்பித்து நீதிமன்றத்தில் அதன் நகலை தாக்கல் செய்ய வேண்டும். தேர்தல் நேரத்தில் பொங்கல் பரிசு ஆயிரம் ரூபாய் வழங்குவது, வாக்களார்களுக்கு மறைமுகமாக பணம் கொடுக்க வகை செய்யும் என்பதால் உள்ளாட்சி தேர்தல் முடிந்த பின்னரே பொங்கல் பரிசு வழங்க உத்தரவிட வேண்டும் என மானுவில் கூறியிருந்தார்.

நீதிபதிகள் சத்யநாராயணன், ஹேமலதா ஆகியோர் கொண்ட பெஞ்ச் முன்பு ஆஜரான மனுதாரர் வக்கீல் மணிவாசகம், இந்த மனுவை அவசர வழக்காக கருதி, விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என்று முறையிட்டார். இந்த முறையீட்டை கேட்ட நீதிபதிகள், இன்று மதியம் 2.15 மணிக்கு வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக தெரிவித்தனர்.

27 மாவட்டங்களில் வழங்கப்படாது:

இதனிடையே ஊரக உள்ளாட்சித் தேர்தல் 27 மற்றும் 30 தேதிகளில் நடைபெற இருப்பதால், பொங்கல் தொகுப்பு வழங்குதற்கு தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் நேற்று தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு தமிழக அரசு தரப்பில் அளிக்கப்பட்ட பதிலில், தேர்தல் நடைபெறும் 27 மாவட்டங்களில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

தேர்தல்¢நடைபெறாத 9 மாவட்டங்களில் இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படும் என்று அரசு தெரிவித்தது. இதைத் தொடர்ந்து இந்த வழக்கு நேற்று மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் முடித்து வைக்கப்பட்டது.