சென்னை, டிச.20: திருவேற்காடு அருகே சாலையின் குறுக்கே வந்த எருமை மாட்டின் மீது பைக் மோதியதில், தூக்கிவீசப்பட்ட வாலிபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்தவர் சுப்ரமணி. இவரது மகன் அஜய் (வயது 19). இவர், போரூரில் உள்ள தனியார் கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாமாண்டு படித்து வந்தார். வெளியூரில் இருந்து வரும் தனது நண்பரைஅழைத்து வருவதற்காக இன்று அதிகாலை விமான நிலையத்திற்கு பைக்கில் சென்றுள்ளார்.

திருவேற்காடு காடுவெட்டி அருகே சென்றுக்கொண்டிருந்தபோது, எருமைமாடு ஒன்று சாலையின் குறுக்கே வந்துள்ளது. அதிர்ச்சியடைந்த அஜய், சுதாரிப்பதற்குள் பைக் எருமைமாடு மீது மோதியதில், தூக்கி வீசப்பட்ட அஜய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதேபோல், ரியல் எஸ்டேட் தொழில் செய்துவரும் மதன்ராஜ் (வயது 27) என்பவர், நேற்றிரவு வானகரத்தில் இருந்து அம்பத்தூருக்கு பைபாஸ் சாலையில் பைக்கில் சென்றுக்கொண்டிருந்துள்ளார்.
அப்போது, முன்னால் சென்ற லாரி மீது மோதாமல் இருப்பதற்காக பிரேக் போட்டதில், நிலைதடுமாறி பைக்கில் இருந்து தவறி கீழே விழுந்து மதன்ராஜ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த இரு விபத்துகள் குறித்தும் பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.