– கௌசல்யா ஜவஹர் –

ஆண்டாளும் பெரியாழ்வாரும்

ஆண்டாளின் மிகப்பெரிய பலமே அவளது வளர்ப்பு தந்தை பெரியாழ்வார் தான். பெரியாழ்வார் தன் மகளின் ஞான, பக்தி வைராக்கியத்தை நன்கு உணர்ந்து கொண்டு, அவள் மனம் அறிந்து அவளின் குறிக்கோளுக்கு துணை நின்றவர். ஆண்டாள் பெரியாழ்வார் உறவை சற்றே காண்போம்.

ஆழ்வார்களில் ஒருவரான பெரியாழ்வார், ஸ்ரீவில்லிபுத்தூரில் எம்பெருமானுக்கு புஷ்ப கைங்கர்யம் செய்து வந்தார். ஒரு அழகான நந்தவனம் அமைத்து அங்கே விதவிதமான மலர்கள் மற்றும் துளசியை வளர்த்து நித்தமும் அவற்றை மாலையாகத் தொடுத்து எம்பெருமானுக்கு அணிவித்து வந்தார். ஒரு ஆடிப்பூர நன்நாளில் வழக்கம் போல் பூ பறிக்க வந்தவர், துளசிச்செடியருகில் மிக்க ஒளியுடன் கூடிய ஒரு பெண் குழந்தையை கண்டார். தன் மனதை பறிகொடுத்தார். ஜனகராஜனுக்கு சீதை கிடைத்ததைப்போல் தனக்கு இக்குழந்தை கிடைத்ததாக அகமகிழ்ந்தார். குழந்தைக்கு ‘கோதை’ என பெயர் சூட்டினார். அங்கு வண்டுகள் ரீங்காரமிட்டு இசைபாடியதால் ‘சுருப்பார் குழற்கோதை’ எனப்பெயர் வைத்தார் என்றும் கூறுவதுண்டு.

குழந்தை கோதை தத்தித் தவழ்ந்து, தாவித் தளிர் நடையிட்டு, மழலை பேசித் தன் தந்தையை மயக்கினாள், மகிழ்வித்தாள், ஆட்கொண்டாள். ஆழ்வார் கோதைக்கு கண்ணன் கதைகளையும், லீலைகளையும், குறும்புகளையும். கிருஷ்ணாம்மிருதத்தையும் அன்னமூட்டும் போது சேர்த்து ஊட்டினார். சிறுமி கோதை சிற்றாடை கட்டிக்கொண்டு சிற்றில் கட்டி விளையாடினாள். அங்கு அரங்கனுக்கு தனி அறை அமைத்தாள், பெருமான் அங்கு அமர்ந்தான், அவனுடைய சங்கு, சக்கரம், தண்டு, வாள், வில் ஆகியவற்றை வரைந்து இன்புற்றாள், இதனைக் கண்ட பெரியாழ்வார் மெய்சிலிர்த்தார்.

தந்தையே குருவாகிறார்

கோதைக்கு தக்கவயது வந்ததும் பெரியாழ்வாரே பஞ்ச சம்ஸ்காரங்களைச் செய்து வைத்து பரஞானத்தைப் போதித்தார். நந்தவனத்தில் நீர் பாய்ச்சுதல் மலர் பறித்தல், மாலை தொடுத்தல் ஆகிய பணிகளில் ஈடுபடும் காலத்தில் கூடவே பெரியாழ்வார் கோதைக்கு திருமாலின் பல அவதாரங்களைப்பற்றியும், கோவிந்தனின் மாண்பையும், கண்ணனின் தீராத விளையாட்டுக்களையும் சொல்லி மகிழ்ந்தார். அங்கு நந்தவனம் கோதைக்கு ஞானப்பூங்காவாக மாறியது. ஆண்டாள் பட்டை தீட்டப்பட்ட வைரமாய், ஞானப் பூங்கொடியாய் மலர்ந்து பிரகாசித்தாள்.

திருப்பாவை பாசுரம் _ 5

மாயனை மன்னு வடமதுரை மைந்தனை

தூய பெருநீர் யமுனைத் துறைவனை

ஆயர் குலத்தினில் தோன்றும் மணிவிளக்கைத்

தாயைக் குடல் விளக்கம் செய்த தாமோதரனைத்

தூயோமாய் வந்துநாம் தூமலர் தூவித்தொழுது

வாயினால் பாடி மனத்தினால் சிந்திக்கப்

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்

தீயினில் தூசாகும் செப்பு ஏல் ஓர் எம்பாவாய்.

திருப்பாவை பாசுரம் _ 6

புள்ளும் சிலம்பினகாண் புள்ளரையன் கோயிலில்

வெள்ளை விளிசங்கின் பேரரவம் கேட்டிலையோ?

பிள்ளாய்! எழுந்திராய் பேய்முலை நஞ்சுண்டு

கள்ளச் சகடம் கலக்கழியக் காலோச்சி

வெள்ளத் தரவில் துயிலமர்ந்த வித்தினை

உள்ளத்துக் கொண்டு முனிவர்களும் யோகிகளும்

மெள்ள எழுந்து அரியென்ற பேரரவம்

உள்ளம் புகுந்து குளிர்ந்து ஏல் ஓர் எம்பாவாய்.