சென்னை. டிச.21: உள்ளாட்சித் தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் மற்றும் சுயேட்சை வேட்பாளர்களின் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது.

தமிழகத்தில் 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 27 மற்றும் 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டமாக நடைபெறுகிறது. இந்தத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் கடந்த 9-ம் தேதி தொடங்கி 16-ம் தேதி வரை நடைபெற்றது. 17-ம் தேதி மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டன. 19-ம் தேதியுடன் வேட்புமனு வாபஸ் முடிவடைந்தது. இதையடுத்து நேற்றிரவு இறுதி வேட்பாளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் வெளியிட்டது.

அதன்படி, ஊராட்சி, ஊராட்சி வார்டு, மாவட்ட ஊராட்சி, மாவட்ட ஊராட்சி வார்டு மற்றும் ஒன்றிய ஊராட்சி வார்டுகளில் மொத்தம் 2 லட்சத்து 31,890 பேர் களத்தில் உள்ளனர். 18,570 பேர் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும் வாக்காளர்களுக்கு பணப்பட்டுவாடா மற்றும் பரிசுப்பொருட்கள் கொடுப்பதை தடுப்பதற்காக பறக்கும் படைகளை மாநில தேர்தல் ஆணையம் அமைத்துள்ளது.

முதல் கட்ட தேர்தலுக்கு இன்னும் 6 நாட்களே உள்ளன என்பதால் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. தலைவர்கள் அளவில் அல்லாமல் உள்ளூர் கட்சித் தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் வேட்பாளர்களுடன் சென்று பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை மேற்கு பகுதி மாவட்ட குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் அ.தி.மு.க. வேட்பாளர் ஆர்கே.சிவசாமிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் உணவகம் ஒன்றில் புரோட்டா சுட்டு பிரச்சாரம் செய்தார்.

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் ஊராட்சி மன்றத் தலைவருக்கு போட்டியிடும் வேட்பாளர் சிக்கந்தருக்கு கத்திரிக்காய் சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால், பிரச்சாரத்தின்போது கடைகளில் கத்திரிக்காயை தோரணமாக தொங்கவிட்டதுடன், கத்திரிக்காயை கையில் ஏந்திச் சென்றார்.

திருப்பூர் ஒன்றிய 3-வது வார்டு உறுப்பினர் மற்றும் பெருமாநல்லூர் ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடும் திமுக மற்றும் பிஜேபி வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.

தஞ்சை மாவட்டத்தில் 20 ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கும்பகோணம் ஒன்றியத்தில் கள்ளப்புலியூர், பாபநாசம் ஒன்றியத்தில் இலுப்பக்கோரை, அம்மாபேட்டை ஒன்றியத்தில் இரும்புதலை, பெருமாக்கநல்லூர் ஆகிய ஊராட்சி மன்ற தலைவர்கள் போட்டியின்றி தேர்வாகியுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் 6வது வார்டு உறுப்பினர் தேர்தலில் அ.தி.மு.க. வேட்பாளர் லதா என்பவர் கொட்டும் மழையில் ஆதரவாளர்களுடன் சென்று வீடுவீடாக வாக்குசேகரித்தார்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட கொற்கை, ஐவநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் வேட்பாளர்கள் இரவு நேரத்தில் வீடு வீடாகச் சென்று ஓட்டுக் கேட்டனர்.

கடலூர் திருவந்திபுரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் சுதாகர் என்பவருக்கு ஆட்டோ சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளதால் நூற்றுக்கும் மேற்பட்ட ஆட்டோக்களுடன் வீதிவீதியாக சென்று வாக்கு கேட்டார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி ஊராட்சி ஒன்றியம் வடுடாடசாத்து ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிடும் ஜி. வெங்கடேசன் புதியகாலனி பகுதியில் வாக்கு சேகரித்து, கிராமத்திற்கான அத்தியாவசியத் தேவைகளை நிறைவேற்றுவதாக உறுதி அளித்தார்.

கோவை மாவட்டம் பொள்ளாச்சி வடக்கு ஒன்றியத்தில் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கிராமம் கிராமமாக சென்று தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். முன்னதாக அங்குள்ள சூலக்கல் மாரியம்மன் கோவிலில் சாமிதரிசனம் செய்தார். பிரசாரத்தின் போது பேசிய அவர், திட்டமிட்டபடி நகராட்சி, மாநகராட்சி தேர்தல் நடைபெறும் என்றும், திமுக வழக்கு தொடராமல் இருந்தால் மக்கள் ஜனநாயக கடமை ஆற்றுவார்கள் என்றும் கூறினார்.