சிதம்பரம், டிச. 21: சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனம் வரும் ஜனவரி 10-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி 1-ம் தேதி கொடியேற்றப்படுகிறது.

உலகப் புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில் ஆருத்ரா தரிசன விழா மிகவும் விமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டுக்கான வைபவம் வரும் ஜனவரி 1-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழாவில் ஆருத்ரா தேர் திருவிழா ஜனவரி 9-ம் தேதி நடைபெறுகிறது. அன்று காலை நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரி அம்மனும் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் பக்தர்களால் வடம்பிடித்து சிதம்பரத்தின் நான்கு முக்கிய வீதிகளில் வலம் வருவார்கள்.

பின்பு தேர் நிலைக்கு வந்ததும் சிதம்பரம் ஆயிரங்கால் மண்டபத்தில் உள்ள முகப்பின் நடராஜப் பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் விசேஷ லட்சார்ச்சனை நடைபெறும். அதன்பின்பு 10-ம் தேதி அதிகாலை மூன்று மணிக்கு நடராஜப் பெருமானுக்கும், சிவகாமசுந்தரி அம்மனுக்கும் ஆயிரங்கால் மண்டபம் முகப்பில் மகா அபிஷேகம் நடைபெறும். பின்பு மதியம் இரண்டு மணிக்கு ஆருத்ரா தரிசன விழா நடைபெறும் அப்பொழுது நடராஜ பெருமானும் சிவகாமசுந்தரி அம்மனும் நடனம் ஆடியபடி பக்தர்களுக்கு தரிசனம் அளிப்பார்கள். இத்திருவிழாவின் போது காலை மாலை பஞ்சமூர்த்தி சுவாமி புறப்பாடும், விசேஷ நாதஸ்வர கச்சேரிகளும், வேத பாராயணம், தேவாரம், திருமுறை, விசேஷ நாதஸ்வர கச்சேரிகளும் நடைபெறும்

இதற்கான ஏற்பாடுகளை நடராஜர் கோவில் பொது தீட்சிதர்கள் செயலாளர் பாலகணேஷ் தீட்சதர் தலைமையில் பொது தீட்சிதர்கள் பாதுகாப்பு ஏற்பாடு களை கடலூர் மாவட்ட போலீஸ் எஸ்பி அபிநவ் மற்றும் சிதம்பரம் சரக போலீஸ் டிஎஸ்பி கார்த்திகேயன் தலைமையில் செய்யப்பட்டு வருகிறது.