சென்னை, டிச.21: செல்லாத 500, 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா,
2016-ல் சொத்துகளை வாங்கி குவித்தது பற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டுள்ளது.
சொத்துக்குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு அக்ரஹார சிறையில் உள்ளார். அவர்மீது வருமானவரி தொடர்பான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, இத்துறையின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் ஏ.பி.சீனிவாஸ், ஏ.என்.ஆர்.ஜெயபிரதா ஆகியோர் 2016 நவம்பர் 8-ல் உயர்மதிப்பு ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்ட பிறகு, இந்த ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சசிகலா வாங்கி குவித்துள்ள சொத்துகள் விவரத்தை தெரிவித்தனர்.

அதன்படி, பெரம்பூரில் ஷாப்பிங் மால், மதுரை கே.கே.நகரில் இன்னொரு ஷாப்பிங் மால், புதுச்சேரியில் ரிசார்ட் மற்றும் கோயமுத்தூரில் காகித ஆலை, சென்னை அருகே ஒரகடத்தில் சர்க்கரை ஆலை, ஓம்.எம்.ஆரில் மென்பொருள் நிறுவனம் மற்றும் கோவையில் காற்றாலைகள் வாங்கப்பட்டு உள்ளன.
இந்த சொத்துகளை மதிப்பீடு செய்வதற்கான உத்தரவை உயர்நீதிமன்றம் பிறப்பித்தது. இந்த ஆணையின் நகல் வருமான வரித்துறையின் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருப்பதாகவும், அவற்றை வரிதாரர் பார்த்து தெரிந்துகொள்ளலாம் என்றும் வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், சசிகலா 2017 அக்டோபரில் பரோலில் வந்தபோது அவரது உறவினர் கிருஷ்ணபிரியா வீட்டில் தங்கியிருந்துள்ளார். அப்போது, சொத்துகள் தொடர்பான ஆவணங்களை அழித்ததாகவும், ஒருசில பேப்பர்களை கிருஷ்ணபிரியா தனது மொபைல் போனில் பதிவேற்றம் செய்து வைத்திருந்ததையும் வருமான வரித்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
2017 நவம்பர் 9-ல் கிருஷ்ணபிரியா இல்லத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியபோது, அவரது செல்போனில் இந்த சொத்து தொடர்பான காகிதங்கள் இருந்ததை கண்டுபிடித்து அவரிடம் விசாரணை நடத்தியதாகவும், அப்போது, தனது வீட்டில் சசிகலா தங்கியிருந்தபோது, சில உதிரி காகிதங்களை அழித்தபோது ஒருசிலவற்றை தாம் செல்போனில் சேவ் பண்ணி வைத்திருந்ததையும் கிருஷ்ணபிரியா ஒப்புக்கொண்டதாக வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாக அத்துறையின் வழக்கறிஞர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கிருஷ்ணபிரியா, வக்கீல் செந்தில் உள்ளிட்ட சிலர் வர்த்தகர்களின் வாக்குமூலங்களை பதிவு செய்து இருப்பதாகவும், நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதா சிகிச்சை பெற்றுவந்தபோது, அந்த மருத்துவமனையில் சசிகலாவை, செந்தில் சந்தித்ததையும் அப்போது சொத்துகளின் உரிமையாளர்களுக்கு முன்பணமாக பழைய ரூ.500, 1000 நோட்டுகள் கொடுக்கப்பட்டு இருப்பதை சசிகலா தெரிவித்ததாகவும் அந்த வழக்கறிஞர் தனது வாக்குமூலத்தில் தெரிவித்து இருப்பதாக வருமான வரித்துறை மேலும் கூறியுள்ளது.