– கௌசல்யா ஜவஹர் –

பெரியாழ்வாரின் வளர்ப்பில் வளர்ந்த கோதை குழவிப்பருவம் நீங்கி, குமரிப் பருவம் எய்தினாள். முதலில் கண்ணனின் குறும்புகளை ரசித்தக் கோதை வயது ஏற, ஏற அவனையே காதலனாகக் காண ஆரம்பித்தாள். மனம், வாக்கு, காயம் முழுவதும் கண்ணனுக்கே தந்து, அவனையே நினைக்கலானாள், கண்ணன் மேல் கொண்ட பக்தி, தீராக்காதலாய் உருமாறியது. இதனை ஒரு சாதாரண பரிமாண வளர்ச்சியாகப் பார்ப்பது ஒரு புறம் இருக்க, பெரியாழ்வார், ஆண்டாளுக்கு ஏனைய ஆழ்வார்கள் பற்றியும், அவர்களது பக்தி கமழும் பாடல்களைப் பற்றியும், கற்றுக்கொடுத்தமைப் பற்றியும் கவனிக்க வேண்டியதாகிறது.

வைணவத்தில் இறைவனுக்கும், ஆன்மாவிற்கும் உள்ள சம்பந்தத்தை நவவிதமான (9 விதமான) சம்பந்தமாக எடுத்துக் கூறுகிறது, இந்த ஒன்பது வகை உறவுகளில் கணவன்-மனைவி உறவே சிறந்ததாக கூறப்படுகிறது. இதனை அடியேற்றியே ஆழ்வார்கள், தங்களை நாயகியாக பாவித்துக் கொண்டு, இறைவனை நாயகனாக கற்பனை செய்து கொண்டு நாயகா-நாயகி பாவனையில் பாசுரங்களைப் பாடியுள்ளார்கள். ஆண்டாளுக்கு முந்தைய ஆழ்வார்களுள் இப்படி நிறைய பாசுரங்களைப் பாடியவர் நம்மாழ்வார். ஆண்டாள் தன் தந்தை வழியே நம்மாழ்வார் பாடல்களை அனுபவித்து, அவ்வழியிலேயே எம்பெருமானை அடைய தீர்மானித்து, எம்பெருமானின் காதலியாக மாறி, அவனையே வரித்து, அவனையே தியானித்து பாசுரங்கள் பாடியுள்ளார் என்ற கருத்தும் சிந்திக்க வேண்டியதாகிறது. ஆண்டாளின் காதலால் தோன்றிய முதல் பிரபந்தம் திருப்பாவை. பாவை நோன்பு முழுமையாக முடிந்த பின்பும், கண்ணன் தன்னை ஆட்கொள்ளாததால், ஆண்டாள், ‘நாச்சியார் திருமொழி’ என்ற 143 பாசுரங்களைக் கொண்ட பிரபந்தத்தினை இயற்றியுள்ளார். இது முழுக்க, முழுக்க காதல் ரசம் அமையப்பெற்ற பிரபந்தமாகும்.

திருப்பாவை பாசுரம் _ 7

கீசு கீசென்றெங்கும் ஆனைச்சாத்தன் கலந்து

பேசின பேச்சரவம் கேட்டிலையோ! பேய்ப்பெண்ணே

காசும் பிறப்பும் கலகலப்பக் கைபேர்த்து

வாச நறுங்குழல் ஆய்ச்சியர் மத்தினால்

ஓசைப் படுத்த தயிரரவம் கேட்டிலையோ

நாயகப் பெண் பிள்ளாய்! நாராயணன் மூர்த்தி

கேசவனைப் பாடவும்நீ கேட்டே கிடத்தியோ

தேசமுடையாய்! திற ஏல் ஓர் எம்பாவாய்.