சென்னை,டிச.25: தமிழகத்தில் முதல்கட்ட உள்ளாட்சி தேர்தலுக்கான பிரசாரம் இன்று மாலையுடன் முடிவடைகிறது. பிரச்சார நேரம் முடிந்ததும் வெளியாட்கள் உடனடியாக வெளியேற மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மாலை பிரசாரம் முடிவடையவுள்ளதால், தங்களது கட்சி வேட்பாளர்களுக்கு கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளன. 4 ஆயிரத்து 700 ஊராட்சி தலைவர் பதவி இடங்கள், 37 ஆயிரத்து 830 ஊராட்சி வார்டு உறுப்பினர் இடங்கள், 2 ஆயிரத்து 546 ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர் இடங்கள், 260 மாவட்ட வார்டு உறுப்பினர் பதவி இடங்களுக்கு 27ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அப்பகுதிகளில் இன்று மாலையுடன் தேர்தல் பிரச்சாரம் ஓய்கிறது.

கோவை மாவட்டம் நீலாம்பூரில் ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் 21 வயதான நாகர்ஜூன், தமிழகத்திலேயே இளம் வேட்பாளர் என்ற பெருமையை பெற்றுள்ளார். கல்லூரி மாணவரான இவர் மீம்ஸ்கள் உதவியுடன் சமூகவலைதளங்களில் வாக்கு சேகரித்து வருகிறார்.

ஆரணி அடுத்த லாடவரம் ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு போட்டியிடும் கற்பகம் என்பவர், வயலில் வேலை செய்தவர்களிடம் வாக்கு சேகரித்ததோடு, தலையில் துண்டை கட்டிக்கொண்டு நடவு நட்டார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மறமடக்கி கிராம மக்கள், தங்கள் வாக்கை விற்கக்கூடாது என முடிவு செய்துள்ளனர். இது தொடர்பான விழிப்புணர்வு போஸ்டர்களை கிராமத்து இளைஞர்கள் வீடுதோறும் ஒட்டி வருகின்றனர்.

அதே போன்று தமிழகத்தில் 27 மாவட்டங்களில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தேர்தல்களில் அதிமுக, திமுக மற்றும் கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அந்தந்த மாவட்ட அமைச்சர்கள், அக்கட்சி எம்எல்ஏக்கள் என தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன.

இன்று மாலை 5 மணிக்கு பிறகு சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளில் வாக்காளர்கள் அல்லாதவர்கள் வெளியேறி விட வேண்டும் என்று மாநில தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. அவ்வாறு வெளியேறாதவர்கள் மீது தேர்தல் நடத்தை விதிகளை மீறியதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் எச்சரித்துள்ளது. வாக்குப்பதிவு ஏற்பாடுகள் குறித்து 27 மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல்துறை கண்காணிப்பாளர்களுடன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் மாநில தேர்தல் ஆணையர் பழனிசாமி ஆலோசனை நடத்தினார்.

தேர்தல் நடக்கும் மாவட்டங்களில் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவை வீடியோவில் பதிவு செய்யவும், வெப் கேமராக்கள் மூலம் கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சித் தலைவர், ஊராட்சி உறுப்பினர் என 4 பதவிகளுக்கும் வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடப்பதால் ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் தலைமை அலுவலர் உட்பட 7 அலுவலர்கள் நியமிக்கப்படுகின்றனர்.

மேலும் வாக்குப்பதிவு அன்று வாக்குச்சாவடிக்குள் வாக்குச்சாவடி அலுவலர்கள், தேவை ஏற்பட்டால் தலைமை வாக்குச்சாவடி அலுவலர் அனுமதியுடன் போலீஸார், மாநில மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள், தேர்தல் பார்வையாளர்கள், வேட்பாளர்கள், தேர்தல் முகவர்கள், வாக்காளர்கள், வாக்காளர்களுடன் வரும் கைக்குழந்தைகள், மாற்றுத் திறனாளியின் உதவியாளர் என 9 விதமான நபர்களை மட்டுமே அனுமதிக்கலாம்.

இதுதவிர மாநில தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்டோரையும் அனுமதிக்கலாம். ஆண், பெண் வாக்காளர்களுக்கு தனித்தனி வரிசையை ஏற்படுத்த வேண்டும். ஆண், பெண்ணை மாறி, மாறி வாக்களிக்க அனுமதிக்க வேண்டும். மாற்றுத் திறனாளிகள், முதியோர் மற்றும் கைக்குழந்தைகளுடன் வரும் பெண்களுக்கு வாக்களிக்க முன்னுரிமை அளிக்க வேண்டுமென தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தேர்தலையொட்டி 27 மாவட்டங்களில் நாளை மறுநாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.