– கௌசல்யா ஜவஹர் –

சூடிக் கொடுத்த சுடர்கொடி

எம்பெருமானுக்காக தந்தை பெரியாழ்வார் தொடுத்துவைத்துள்ள மாலையை கோதை தான் சூடிக்களைந்து கொடுப்பதை நித்தம் செய்து வந்தாள்.

கோதை ஒரு நாள் வழக்கம் போல், மாலைகளையணிந்து நிலைக் கண்ணாடியில் தன்னை மறந்து அழகு பார்த்துக் கொண்டிருந்த போது, வெளியே சென்று திரும்பிய பெரியாழ்வார் இக்காட்சியைக் கண்டு பதறினார். கோதை இப்படி செய்வாள் என்பதை அவரால் நம்ப முடியவில்லை. மகளை கோபித்துவிட்டு, மிக்க மனவருத்தத்துடன் நந்தவனம் சென்று அவசர அவசரமாக புதிய மலர்களைக் கொய்து மாலையாக்கி எடுத்துச் சென்றார். ஆழ்வார் எம்பெருமானிடம் தன் மகள் அறியாமல் செய்த பிழையைப் பொறுத்தருளுமாறு மனமுருகி வேண்டிக் கொண்டார்.

அன்றிரவு பெரியாழ்வாருக்கு உறக்கம் கொள்ளவில்லை, தன் மகளின் செயலால் மனம் கலங்கித் தவித்தார். வெகு நேரம் கழித்து விடியலில் கண்ணயர்ந்தவர் ஒரு கனவு கண்டார். அதில் வட பெருங்கோயில் பெருமான் தோன்றி, ‘‘ஆழ்வீர், உம் திருமகள் சூடிக்கொடுத்த மாலையே நறுமணம் மிக்கவை. அவற்றை நான் உகந்து அணிகிறேன். ஆதலால் கோதை தினமும் அணிந்த தொடை மாலையையே கொண்டுவருக’’ என்று கூறி மறைந்தார்.

ஆண்டாள்

பெரியாழ்வாருக்கு உறக்கம் கலைந்தது, தான் கண்டது கனவா? நிஜமா? ‘‘என்னபேறு பெற்றேன்? என் அருமை மகள் பெற்ற பேறல்லவா இது’’ என்று மகிழ்ந்தார்,

‘‘அம்மா கோதாய், நீ சூடிக்களைந்த மாலைகளையே எம்பெருமான் திருவுள்ளம் பற்ற விரும்புகிறான். (அணிய விரும்புகிறான்). நீ என்னை மாத்திரமன்று, இந்த உலகத்தை மாத்திரமன்று- சர்வலோக சரண்யனான ஆண்டவனையே ஆண்டுவிட்டாய். எனவே இன்று முதல் உனது பிள்ளைப் பெயராகிய கோதை என்பது மாறி ‘ஆண்டாள்’ என்றே உலகத்தாரால் அழைக்கப்படுவாய். அன்றியும் நீ சூடிக்களைந்த மாலைகளையே எம்பெருமான் விரும்புவதால் ‘சூடிக்கொடுத்த சுடர்க்கொடி’ என்று போற்றப்படுவாய் என்று சொல்லி மகிழ்ந்தார். அன்று முதல் தாம் கட்டிய மாலையைக் கோதையிடம் கொடுத்து அவள் சூடிக்கொடுத்த பிறகே வடபெருங்கோயிலுக்கு கொண்டு சென்றார்.

சூடிக்கொடுக்கும் முறைமை

ஸ்ரீவில்லிப்புத்தூரில் இன்றும் ஒவ்வொரு நாள் இரவும் ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலையே மறுநாள் காலை வடபெருங்கோயில் எம்பெருமானுக்கு மேள தாள வாத்தியங்களுடன் சாத்தப்படுகிறது.

ஒவ்வொரு வருடமும் புரட்டாசி மாதம், திருப்பதியில் திருவேங்கடமுடையான் பிரம்மோற்சவத்தில் கருடசேவை உற்சவத்தின்போது திருவில்லிபுத்தூரில் ஆண்டாள் சூடிய மாலையும், பரிவட்டமும் கொண்டு வரப்பட்டு அவற்றை அணிந்தே திருவேங்கடமுடையான் கருடசேவை சாதிக்கிறான்.

மதுரையில் இதேபோன்று, ஒவ்வொரு ஆண்டும் சித்ரா பௌர்ணமியன்று திருமாலிருஞ்சோலை சுந்தரராஜப் பெருமாளுக்கும், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாளுக்கு சாற்றிய மாலையும், பரிவட்டமும் அனுப்பப்பட்டு சாத்தப்படுகின்றது.

திருப்பாவை பாசுரம் _ 9

தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய

தூபம் கமழ துயிலணைமேல் கண்வளரும்

மாமன் மகளே! மணிக்கதவம் தாள்திறவாய்!

மாமீர்! அவளை எழுப்பீரோ உம்மகள்தான்

ஊமையோ? அன்றிச் செவிடோ? அனந்தலோ?

ஏமப் பெருந்துயில் மந்திரப் பட்டாளோ?

மாமாயவன் மாதவன் வைகுந்தன் என்றென்று

நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.