சென்னை, டிச.25: சென்னை மாநகராட்சி ஒப்பந்தபணிகள் ஒளிவுமறைவின்றி நடைபெறுவதால் எந்த முறைகேடும் நடைபெறவில்லை என பெருநகர மாநகராட்சி ஒப்பந்தக்காரர் நலச்சங்கம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, இச்சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

அரசியல் காழ்ப்புணர்ச்சி மற்றும் தனிநபர் பகைமை-வெறுப்பு காரணமாக கடந்த சில நாட்களாக தொடர்ந்து பெருநகர சென்னை மாநகராட்சி பற்றியும், அதிகாரிகள் மற்றும் ஒப்பந்ததாரர்கள் மீதும் சிலர் அவதூறு பரப்பி வருகின்றனர்.
இது எங்களுக்கு மிகவும் வேதனை அளிப்பதாக உள்ளது. சென்னை மாநகராட்சி துப்புரவு பணி மற்றும் மழைநீர் வடிகால்வாய் தூர்வாரும் பணிகள் மற்ற எல்லாவிதமான மக்கள் நலப் பணிகள் அனைத்தையும் ஒப்பந்த அடிப்படையில் தாமாக மேற்கொண்டு வருகிறோம். அனைத்து ஒப்பந்ததாரர்களும் இணையத்தின் மூலம் ஒப்பந்தப்புள்ளி சமர்ப்பித்து, எந்த வித ஒளிவுமறையுமின்றி நடைபெற்று வருகின்றன.

இவ்விதமான டெண்டர் கோரலில் தாங்கள் சந்தை விலைகளைப் பொறுத்து எங்கள் டெண்டரை அளிக்கின்றோம். நாங்கள் அளிக்கும் விலைப்புள்ளிக்கு ஒப்பந்தங்களும் அளிப்பதில்லை. காரணம், அளித்த விலைகளில் இருந்து ஒருமுறைக்கு இரண்டு முறை விலை குறைப்பு செய்த பின்னர் தான் அதுவும் டெண்டர் கமிட்டிக்கு திருப்திகரமாக இருக்கும் பட்சத்தில் எங்களுக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.
மேலும், இதனை மாநில கணக்குத் தணிக்கை துறையினர் முறையாக ஆய்வு செய்கின்றனர். தேசிய கணக்குத்துறையும் இவைகளை தணிக்கை செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே இவைகளில் எந்த வித தவறும் நடப்பதற்கு வழியில்லை.